கல்விதான் ஆயுதம்.. நிரூபித்து காட்டிய மன்னார்குடி துர்கா! நகராட்சி ஆணையரான 'தூய்மை பணியாளர்' மகள்
திருவாரூர்: கல்வி எனும் ஆயுதத்தால் எதையும் சாதித்திட முடியும் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மன்னார்குடி துர்கா. தூய்மை பணியாளரின் மகளான துர்கா தன் குடும்ப கஷ்டத்துக்கு இடையேயும் நன்றாக படித்து குரூப் 2 தேர்வில் வெற்றியடைந்து திருத்துறைப்பூண்டி நகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
"படிப்பை மட்டும் விட்டுறக்கூடாது.." "கல்விதான் நம்மை உயர்த்தும் தலை சிறந்த கருவி" என்ற வார்த்தைக்கு ஏற்ப சாதித்து காட்டியிருக்கிறார் மன்னார்குடியை சேர்ந்த துர்கா. தந்தை நகராட்சியில் தூய்மை பணியாளராக பணி செய்து வந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு அரசு தேர்வுகளுக்காக விடாமல் படித்து வந்த துர்கா, குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையாளராக தேர்வு ஆகியிருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு:-

அப்பா தூய்மை பணியாளர்: மன்னார்குடி அருகே உள்ள புதுப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா. இவரது கணவர் நிர்மல்குமார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். துர்கா தனது குடும்பத்தினருடன் தற்போது மதுராந்தகத்தில் வசித்து வருகிறார். துர்காவின் தந்தை சேகர், மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.
கல்வி ஒன்றுதான் ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் மாற்றக்கூடிய சக்தி என்பதை உணர்ந்த சேகர், ஏழ்மை நிலையிலும் தனது மகள் துர்காவை நன்கு படிக்க வைத்தார். தனது நிலையை உணர்ந்த துர்காவும் நன்கு படித்து வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதியிருக்கிறார். ஆனாலும் அதில் தோல்விதான் மிஞ்சியது.
ஸ்டாலின் வழங்கினார்: இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு துர்கா படித்து வந்தார். இதன் பயனாக தற்போது நடந்து முடிந்த குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக தேர்வு ஆகியுள்ளார். இந்த நிலையில் நேற்று, அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.
எந்த உயரத்தையும் அடையலாம்: நகராட்சியின் தூய்மை பணியாளராக தந்தை பணிபுரிந்த நிலையில், நகராட்சி ஆணையர் பதவியை மகள் அலங்கரித்து கல்வியால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் துர்கா. திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துர்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரிடம் பணி நியமன ஆணையை பெற்ற பிறகு தலைமை செயலகத்தில் துர்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசு பள்ளியில் தான் படித்தேன்: நான் அரசு பள்ளி, கல்லூரிகளில் தான் படித்தேன். டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி கமிஷனராகி இருக்கிறேன். தமிழக அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி படித்தாலே நல்ல பதவியை பெற முடியும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காக தயாராகும்போது, அரசின் இலவச பயிற்சி மையத்தின் உதவியைப் பெற்றேன். என் தந்தை தூய்மை பணியாளராக இருந்தார்.
என் அப்பா இருக்கும்போதே: அவர் பட்ட கஷ்டத்தை கண் கூடாக பார்த்திருக்கிறேன். நல்ல வேட்டி சட்டை கூட அணிந்தது இல்லை. நான் பட்ட கஷ்டத்தை என் மகள் படக்கூடாது என்று என்னை படிக்க வைத்தார். அவர் இருக்கும் போதே இந்த பணி கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனது தந்தை 7 மாதங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். எனது தாத்தாவும் தூய்மை பணியாளர்தான். எங்கள் தலைமுறை இனி மாற்றத்தை காண்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications