அதெல்லாம் வேண்டாம்.. எ.வ.வேலுவின் பெருந்தன்மை! அதெப்படி விட முடியும்! முதலமைச்சர் காட்டிய அன்பு!
திருவாரூர்: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பொன்னாடை போர்த்தவும், நினைவுப் பரிசு வழங்கவும் மறந்துவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், கடைசியில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மேடையில் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திருவாரூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டு அவரது வருகை ரத்தானதால் கடைசியில் முதல்வர் ஸ்டாலினும் அவரது தங்கை செல்வியும் திறந்து வைத்தனர்.

இதனிடையே கலைஞர் நூலகம், கலைஞர் கோட்டம், சிலை என பார்த்து பார்த்து கட்டுமானத்தை செதுக்கிய எ.வ.வேலுவை விழாவில் முதலில் கவுரவிக்க மறந்த முதல்வர் ஸ்டாலின், தனது உரையின் போது பேச்சை இடையில் நிறுத்தி எ.வ.வேலுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதாவது தனக்கு போர்த்தப்பட்ட பொன்னாடையையும், தனக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசையும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு கொடுக்கிறேன் என மேடையில் மைக்கில் அறிவித்துவிட்டு அது போலவே செய்தார். முதலமைச்சருக்கு கொடுக்கப்பட்ட நினைவுப் பரிசை அவர் தன்னிடம் வழங்கியதால் அமைச்சர் எ.வ.வேலு மகிழ்ச்சியில் பூரித்துப் போனார்.

இதனிடையே தனக்கு பொன்னாடையும் வேண்டாம், நினைவுப் பரிசும் வேண்டாம் என அமைச்சர் எ.வ.வேலு தவிர்த்ததையும் மேடையிலேயே சுட்டிக்காட்டி, அவர் அப்படி சொன்னால் அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா என்பது போல் இந்த பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கருணாநிதி நினைவு நூலகம், கருணாநிதி நினைவிடம், கலைஞர் கோட்டம் என கடந்த 2 ஆண்டுகளில் காலம் போற்றும் கட்டிடங்களை பொதுப்பணித்துறை மூலம் உருவாக்கியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.












Click it and Unblock the Notifications