திருவாரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள் தர்ணா... அமைச்சர் நிகழ்ச்சி புறக்கணிப்பு..!
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் நிகழ்ச்சியை புறக்கணித்து செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று காலை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அங்கு வருகை தந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அதை படம்பிடித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, வெளியே இருக்குமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக கூறிய செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை சமாதானப் படுத்தும் வகையில் அதிகாரிகள் அவர்களிடம் பேசினர். இதனிடையே நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.
இந்த நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ஒருவர், ''எம்.எல்.ஏ. நல்லவர் தான், ஆனால் இன்று ஏன் அப்படி பேசினார், நடந்துகொண்டார் என எங்களுக்கு புரியவில்லை என்றார். இந்த தர்ணா போராட்டத்தால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இது தொடர்பாக விளக்கம் அறிய எம்.எல்.ஏ. ஆதரவாளர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய போது, இது போல் எதுவும் நடக்கவில்லை, நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிய வருகிறது, விசாரித்துவிட்டு அழைக்கிறேன்'' என இணைப்பை துண்டித்தார்.
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களில் வைப்பது, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்வது, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்குவது உள்ளிட்டவைகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications