10 தொகுதியில் விளையாட்டு மைதானங்கள்.. பட்ஜெட்டில் வெளியாக உள்ள அறிவிப்பு.. சீக்ரெட்டை உடைத்த உதயநிதி
10 தொகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று உதயநிதி கூறியுள்ளார்.
திருவாரூர்: தமிழ்நாட்டின் 10 தொகுதிகளில் விளையாட்டு மைதானம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின், அரசுப் பள்ளிகளில் உடற்கல்வியை கட்டாய பாடமாக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சராகிய பிறகு முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அங்கு அவருக்கு உற்சாக மிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருக்குவளையில் உள்ள தனது மூதாதையர் வீட்டுக்கும் சென்றார் உதயநிதி ஸ்டாலின். அங்கு அஞ்சகம் அம்மையார், கருணாநிதி, முரசொலி மாறன் உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

மக்கள் பணியாற்றுவோம்
அதில், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் துவக்கம் 2020 நவம்பர் 20ம் தேதி தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லம் முன்பு தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராசி முதல் முறையாக மீண்டும் வருகை புரிந்துள்ளேன். பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம் என்று குறிப்பிட்டார்.

திருவாரூரில் உதயநிதி
அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு சிறப்பு திட்ட செயலாக்கு வறுமை ஒழிப்பு ஊரக கடன் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் திட்டங்கள் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

திட்டங்கள் ஆய்வு
இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது குறித்தும், நிறைவேற்றப்படுகின்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

10 தொகுதிகளில் மைதானங்கள்
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். குடும்பத்திற்கு ஒருவருக்காவது அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து பணியாற்றுகிறோம். அதேபோல் 10 தொகுதிகளில் விளையாட்டு மைதானம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியிடப்படும். அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் உடற்கல்வியை கட்டாய பாடம் ஆக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications