2 பவுன்தான் சார் திருடினோம்! பாக்கி 50 பவுன்.. வீட்டின் உரிமையாளர் லாவண்யாவே.. அதிர்ந்த மன்னார்குடி
திருவாரூர் : மன்னார்குடி அருகே திருடர்கள் 2 பவுன் நகையைத்தான் திருடி இருக்கிறார்கள். ஆனால் வீட்டின் உரிமையாளர் மனைவியே 52 பவுன் நகை கொள்ளை போனதாக கூறி, 50 பவுன் நகையை மறைத்து வைத்து ஏமாற்றி உள்ளார். ஏன் அப்படி செய்தார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருடர்களை விட பெரிய திருடர்களாக இருக்காங்களே சிலர் என்று போலீஸே நொந்து கொள்ளும்படி சம்பவம் ஆங்காங்கே நடந்திருக்கிறது. அப்படித்தான் மன்னார்குடியில் 52 பவுன் நகைகள் கொள்ளை போன வழக்கில் திடீர் திருப்பமாக 50 பவுன் நகைகளை வீட்டின் உரிமையாளரின் மனைவியே மறைத்து வைத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் இவருக்கு 45 வயதாகிறது. இவருடைய மனைவி பெயர் லாவண்யா. அருணாச்சலம் வெளிநாட்டில் வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் நாடு திரும்பி சொந்த ஊரான மன்னார்குடிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அருணாச்சலம் கடந்த மாதம் 28-ந் தேதி மன்னார்குடி அருகே சோனாபேட்டை கிராமத்தில் வாழ்ந்து வரும் தனது தாயாரை பார்க்க புறப்பட்டு சென்றுள்ளார். அருணாச்சலத்துடன் அவரது மனைவி லாவண்யா, மகளும் வந்துள்ளனர். அருணாச்சலம் வீட்டை பூட்டி விட்டுத்தான் அம்மாவை பார்க்க போயிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 30-ந் தேதி இரவு குடும்பத்துடன் வீடு திரும்பி உள்ளார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்திருக்கிறது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்துள்ளது.
இதனைக் கண்ட அருணாச்சலம் அதிர்ச்சி அடைந்து மன்னார்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அருணாச்சலம் வீட்டுக்குள் சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.
மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அருணச்சாலம், தனது வீட்டு பீரோவில் இருந்த 52 பவுன் நகைகள் கொள்ளை போய்விட்டதாகவும் மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து கைவரிசை காட்டிவிட்டதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அருணாச்சலம் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் புதுச்சேரி பாகூரை சேர்ந்த பிரபாகரன்(36), காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்(35), வடுவூரை சேர்ந்த முத்து ஆனந்த்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
நகைகள் மறைப்பு: இந்த விசாரணையில் 3 பேரும் அருணாச்சலம் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது நாங்கள் தான். ஆனால் 2 பவுன் நகை, ஒரு வெள்ளி விளக்கு, 2 செல்போன்களை மட்டுமே கொள்ளையடித்தோம் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து அருணாச்சலம் மனைவி லாவண்யாவிடம் போலீசார் எத்தனை பவுன் நகை இருந்தது என்று தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அவர், 50 பவுன் நகைகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததை ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து 50 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே 2 பவுன் நகையை கொள்ளையடித்த பிரபாகரன், முத்து ஆனந்த், ராஜ்மோகன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாவண்யா 50 பவுன் நகைகளை ஏன் மறைத்து வைத்திருந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
50 பவுன் நகைகளை வீட்டின் உரிமையாளரின் மனைவியே மறைத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக நாடகமாடியதை பார்த்த போலீசார்
திருடர்களை விட பெரிய திருடர்களாக இருக்காங்களே என்று நொந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications