ஜெய்ஸ்ரீராம் சொல்லனும்.. திருவாரூரில் பள்ளி மாணவிகளை கோஷம்போட சொன்ன ஆசிரியை! வெடித்தது போராட்டம்
திருவாரூர்: ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஜெய்ஸ்ரீராம் என ஆசிரியர் முழக்கமிட கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கோயிலை திறந்து வைத்து பூஜைகளை செய்தார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மாணவிகளிடம் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட கட்டாயப்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

திருவாரூரில் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 2500 மாணவிகள் பயின்று வருகின்றனர். திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து மதங்களை சேர்ந்த மாணவிகளும் இங்கு வந்து பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பள்ளி தொடங்குவதற்கு முன்பாக நேற்று பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று உள்ளது. அப்போது பள்ளியின் இசை ஆசிரியை ராதா என்பவர் மாணவிகளிடம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரார்த்தனைக் கூட்டத்தில் அனைத்து மாணவிகளும் ஜெய் ஸ்ரீராம் என 3 முறை முழக்கமிட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு திரூவாரூர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட வேண்டும் என பள்ளி ஆசிரியர் ராதா சொன்னதன் அடிப்படையில் மாணவிகளும் முழக்கமிட்டு உள்ளனர். இதனை கண்டித்து இன்று SFI ஆர்ப்பாட்டம்.@Anbil_Mahesh @mkstalin @Udhaystalin @thirumaofficial pic.twitter.com/4pRh0IndZA
— Noorul ibn Jahaber Ali (@nooruljourno) January 23, 2024
இதனால் மாணவிகளும் ஜெய்ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பி இருக்கிறார்கள். அதேபோன்று வகுப்பறைக்கு சென்றபோதும் மாணவிகள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட அந்த ஆசிரியை சொன்னதாகவும் கூறப்படுகிறது. அனைத்து மதத்தினரும் பயின்று வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளை ஜெய்ஸ்ரீராம் என ஆசிரியையே முழக்கமிட சொன்னது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் புகார் அளித்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து பெற்றோர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் பள்ளிக்கு சென்று கண்டித்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே விசாரித்தபோது, "இதே பள்ளியில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று ஆசிரியர்கள் தெரிவித்தார்கள். இப்போது ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட சொல்லி உள்ளார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளோம்." என்றனர். இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் இயக்கமான இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) பள்ளி முன் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி முதல்வர், ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட வைத்த ஆசிரியை உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications