இன்னும் 3 நாளில் கல்யாணம்.. அலறியபடி ஓடிவந்த காதலன்.. காதலன் வீட்டில் சடலமாக கர்ப்பிணி காதலி!
திருவாரூரில் நிறைமாத கர்ப்பிணி இன்னும் 3 நாளில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் காதலன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருவாரூர்: எட்டு மாத கர்ப்பிணியான சுஷ்மிதாவிற்கு இன்னும் 3 நாளில் காதலனுடன் திருமணம் நடைபெற இருந்தது. காதலன் வீட்டில் தங்கியிருந்த அந்த பெண், திடீரென சடலமாக மீட்கப்பட்டசம்பவம் திருவாரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக காதலன் நரேஷ்குமாரின் அம்மா மற்றும் உறவினர்கள் திருவாரூருக்கு சென்றிருந்த நிலையில் விபரீத முடிவு எடுத்த சுஷ்மிதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மேப்பலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் நரேஷ் குமார் 24 வயதாகும் இவர் பி.காம் பட்டதாரி ஆவார். இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு திருவாரூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

காதல் வயப்பட்டார்
நரேஷ் குமாருக்கும் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் நத்தம் பகுதியில் வசிக்கும ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுஷ்மிதா (வயது 21) என்பவருக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கமாகி உள்ளது இதனிடையே சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ் குமாரின் வீட்டின் அருகில் உள்ளதால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

கர்ப்பமானார்
கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சுஷ்மிதா பிஏ வரலாறு முடித்துவிட்டு தற்போது பி.எட் படித்து வந்தாராம். இந்தநிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார்கள். அப்போது நெருக்கம் அதிகமாகி சுஷ்மிதா 8 மாத கர்ப்பமாகி உள்ளார். இந்த விவகாரம் சுஷ்மிதாவின் வீட்டிற்கு தெரிய வர அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காதலன் வீட்டில்
கர்ப்பம் ஆன சுஷ்மிதா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஊரில் பஞ்சாயத்து பேசி காதலர்கள் இருவரையும் மாலை மாற்றிக் கொள்ள செய்திருக்கிறார்கள். அத்துடன் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது எனவும் ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து சுஷ்மிதா நரேஷ் குமாரின் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கி இருந்திருக்கிறார்.

விபரீத முடிவு
அடுத்த மூன்று நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை நரேஷ்குமார் குடும்பத்தினர் செய்து வந்தனர். திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமாரின் அம்மா மற்றும் உறவினர்கள் திருவாரூருக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா, வீட்டிற்கு பின்புறம் உள்ள கூரைக் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

நிறைமாத கர்ப்பிணி
இதை வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த நரேஷ் குமார் கதறி அழுது கூச்சலிட்டிருக்கிறாராம். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுஷ்மிதாவின் சடலத்தை மீட்டு காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நரேஷ்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான சுஷ்மிதாவிற்கு இன்னும் 3 நாளில் காதலனுடன் திருமணம் நடைபெற இருந்தது. காதலன் வீட்டில் தங்கியிருந்த அந்த பெண், திடீரென சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருவாரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications