ஜெயிலுக்கு போனது..செலவு செஞ்சது நீங்க! வேறொருத்தருக்கு அங்கீகாரமா? திமுக எம்எல்ஏ மகன் பேஸ்புக் பதிவு
திருவாரூர்: மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருக்கும் நிலையில், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் மகன்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். திமுக பொருளாளர் டிஆர் பாலு மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆளுநரின் முதன்மை செயலாளர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் இருக்கும் தர்பார் அரங்கில் 11 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார்.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை அமைச்சரவைப் பதவியில் இருந்து ஆளுநர் விடுவித்து உள்ளார்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே டிஆர்பி ராஜாவை வாழ்த்தி பலர் பதிவிட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டத்தில் ஒரு அமைச்சர் கூட இல்லாத குறையை முதலமைச்சர் போக்கிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் அணிவகுத்தன.
இந்த நிலையில் அதற்கு இணையாக எதிர்ப்புகளும் எழுந்திருக்கின்றன. கிட்டத்தட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி தங்களுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆகியோரது பெயர்களே இதில் அதிகம் அடிபட்டன.
இந்த நிலையில் டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கும் முடிவுக்கு எதிராக திருவாரூர் மாவட்ட திமுகவினர் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக போஸ்டரின் படமும் சமூக வலைதளங்களை வலம் வந்துகொண்டு இருக்கிறது. அதில், "திருவாரூர் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றி கழகத்திற்கும் மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த எங்கள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்களுக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும்.

கழகத்திற்காக நாங்கள் இல்லை எங்கள் கலைவாணனுக்காக மட்டும் தான் கழகத்தில் நாங்கள் இருக்கோம்." என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டரை பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர்களே அதிகளவில் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பூண்டி கலைவாணனின் மகன்கள் கலை அமுதன் ஆகியோர் ஒரே பதிவை பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
அதில், "நேற்று அப்பாவிடம் கழக உறுப்பினர்கள்: நம் மாவட்ட கழகத்திற்காக அணைத்து கஷ்டங்களையும் இஷ்டப்பட்டு செய்றீங்க! எவ்வளவு செலவு? போராட்டம், ஜெயில் ஆனால் அங்கீகாரம் வேறொருவருக்கா?
அப்பாவின் பதில்: நம் வீட்டிற்கு வேலி நான் காட்டாமல் வேறு யாரு கட்டுவாங்க னு நினைத்து கொண்டு இருக்கமுடியும் என்றார்.
நம் மாவட்ட கழகத்தை தன் வீடாக நினைக்கும் இவர் மனதிற்கு நல்லதே நடக்கும். நீங்கள் என் இணையற்ற ஹீரோ." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications