திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு பாதையில் நாயை துரத்தும் சிறுத்தை! திடீரென புறமுதுக்கிட்டு ஓடும் சீட்டா!
திருப்பதி: திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருந்த சிசிடிவி காட்சிகளால் பக்தர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதிக்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அது போல் விழாக்காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகிறார்கள். திருப்பதிக்கு இரு மலை பாதை வழியாகவும் வரலாம்.

இதை திவ்ய தரிசனம் என்கிறார்கள். அதாவது அலிபிரி நடைபாதை, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு நடைபாதைகள் உள்ளன. இவ்வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நடந்து பாதயாத்திரையாக செல்கிறார்கள். இவ்வாறு செல்வோருக்கு ஆங்காங்கே ஓய்வு எடுக்கும் இடங்கள், கழிப்பறை உள்ளிட்டவை இருக்கின்றன.
இந்த இரு வழிகளில் அலிபிரியை விட ஸ்ரீவாரி மெட்டு என்ற மலைபாதைதான் தூரம் குறைவாக இருக்கும். அதனால் நிறைய பேர் இந்த மலைபாதை வழியாக ஏறி வருவார்கள். இந்த மலை பாதைகள் வழியாக வருவோருக்கு முக்கால்வாசி தூரத்தில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும். அதை கொண்டு அவர்கள் சுவாமியை தரிசிக்கலாம்.
அண்மைக்காலமாக இந்த இரு மலைபாதைகளிலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அறியப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்துக் கொன்றுவிட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மலைப்பாதையில் சுற்றித் திரிந்த 5 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.
நடைபாதையில் செல்லும் பக்தர்கள் தனியாகச் செல்லக் கூடாது. கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் கம்புகள் வழங்கப்பட்டன. நடைபாதையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைத்து விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
இதனால் பக்தர்கள் சிறுத்தை பயமின்றி நடைபாதையில் சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் உள்ள கட்டுப்பாட்டு அறை அருகே சிறுத்தை ஒன்று வந்தது. இதைக் கண்ட கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் பயந்து அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த நாய்கள் சிறுத்தையை துரத்தியது. இதனால் சிறுத்தை மீண்டும் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

இது போல் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று 71,133 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 35,502 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ 3.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications