திருப்பதி மலையில் நடமாடும் சிறுத்தை.. பாதயாத்திரை பக்தர்களுக்கு கைத்தடி கொடுத்த தேவஸ்தானம்
திருப்பதி: பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் கைத்தடி வழங்கும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது. மலைப் பாதையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பாத யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி அங்கு வந்து செல்கின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறது. பேருந்து, வாகனங்கள் மூலம் கோவிலுக்கு சென்றாலும் பாதையாத்திரையாகவும் பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர். படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்று ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. தொடர் தேடுதலுக்குப் பிறகு 12 ஆம் தேதி காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இறுதியில் சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டது. அதே சமயம் திருப்பதி மலைப்பாதையில் நடைபாதை அருகே மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது.
திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் தற்போது பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பிற்காகக் கைத்தடி வழங்கும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும் திருப்பதி மலைப் பாதையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பாத யாத்திரை செல்ல அனுமதி அளித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications