திருப்பதி சொர்க்கவாசல்.. ஏழுமலையானை தரிசிக்க விரும்புவோர்.. இன்று மிஸ் பண்ணிடாதீங்க
திருப்பதி: திருமலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய பி.ஆர்.நாயுடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சொர்க்க வாசல் தரிசனம் வழங்கப்படும் என்று கூறினார். முதல் 3 நாட்களை தவிர மீதமுள்ள 7 நாட்கள் டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கூறினார்.
திருமலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. மொத்தம் 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் திருப்பதியில் நடக்கிறது. முதல் 3 நாட்களை தவிர மீதமுள்ள 7 நாட்கள் டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்யலாம்.

3 நாட்கள் யாருக்கு அனுமதி
முதல் 3 நாட்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே திருப்பதியில் சொர்க்க வாசல் தரிசனம் வழங்கப்படும். மீதமுள்ள 7 நாட்கள் முழுவதும் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 182 மணி நேரங்களில் 164 மணி நேரம் சாதாரண பக்தர்களுக்கான தரிசன வசதி செய்யப்பட இருக்கிறது. அதே காலத்தில் தினமும் 1,000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
டிசம்பர் 5-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள், அதே நாள் மதியம் 3 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் 10 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும். அதேபோல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனமும் அந்த 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படும். இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி முதல் 3 நாட்களுக்கான சாமி தரிசன டோக்கன்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
5 ஆயிரம் டோக்கன்கள்
திருப்பதி, திருமலை, ரேணிகுண்டா, சந்திரகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு தினமும் 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். அவர்களுக்கு டிசம்பர் 10-ந்தேதி தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய முடியும். அனைத்து முன்னேற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.
இன்று முதல் முன்பதிவு
இன்று காலை 10 மணி முதல் சொர்க்க வாசல் தரிசன டோக்கன்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது தொடங்கி உள்ளது. முதல் 3 நாட்களுக்கான டோக்கன்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சொர்க்க வாசல் தரிசனம் கிடைக்கும் என்பதால் பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications