மோடி கிட்ட ஏன் அப்பவே சொல்லலை.. திருப்பதி பிரச்னையில் ரோஜா அடுக்கடுக்கான கேள்வி
திருப்பதி: திருப்பதி கோயில் லட்டு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக பேசியுள்ள, முன்னாள் அமைச்சர் ரோஜா சந்திரபாபு நாயுடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி கோயிலின் லட்டு பிரசாரதத்தில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது புகார் வைத்தார். இந்தப் புகார் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை நிவர்த்தி செய்வதற்காக திருப்பதி கோயிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் பரிகார விரதத்தில் ஈடுபட்டுள்ளார். பக்தர்களும் வீடுகளில் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்ய திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இந்த விவகாரம் ஆந்திர அரசியலிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீதும், ஜெகன் மோகன் ரெட்டி மீதும் தெலுங்கு தேசம், பவன் கல்யாண் உள்ளிட்டோர் புகார் வைத்து வருகின்றனர். இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்றி வருகிறது.
இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருப்பதி கோயில் நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு சுட்டிக்காட்ட வேண்டும். அது அவர்களின் தார்மீக பொறுப்பு. புனிதமான திருப்பதி குறித்து, ஒரு முதலமைச்சர் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து பேசுவது நியாயமான செயலா. திருப்பதி லட்டு குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு சோதனை செய்தனர்.
அப்போது நெய்யில் வனஸ்பதி மட்டுமே கலந்திருப்பதாக கூறினார்கள். இந்நிலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவை சந்திரபாபு நாயுடு மிரட்டி, விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்துள்ளதாக பொய் சொல்ல வைத்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி வகித்தபோது அரசியலுக்காக இதுபோன்ற மலிவான ஒரு குற்றச்சாட்டை கூட வைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்துக்காக அந்த வெங்கடேச பெருமானைக் கூட விட்டு வைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தனது சுயநல அரசியலுக்காக கடவுளின் பெயரை பயன்படுத்த தொடங்கிவிட்டார். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை திசை திருப்பும் வகையில் இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.
முதலமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் தலையீடு இல்லை என்று சொல்கிறார். ஆனால் திருப்பதி விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது எதற்காக புகார் கூறுகிறார். திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பாஜகவினரும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் சொல்வது போல, தவறு நடந்திருந்தால் ஏன் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை.
உண்மையில் திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு நடக்கவில்லை. தவறு செய்தது சந்திரபாபு நாயுடு தான். சந்திரபாபு நாயுடுக்காக, பவன் கல்யாண் செய்யும் பரிகார பூஜையால் வெங்கடேச பெருமாள் அவரை மன்னிக்க மாட்டார். அந்த கடவுளே சந்திரபாபு நாயுடுவுக்கு தண்டனை வழங்குவார்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications