கோடை லீவு.. மே மாசம் திருப்பதிக்கு போற பிளானா? இன்று ரூ.300 திருமலை தரிசன டிக்கெட் வெளியீடு
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட் இன்று வெளியாகிறது. இதன் மூலம் மே , ஜூன் மாதங்களில் வெங்கடாஜலபதியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு விசேஷ நாட்களான யுகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர்.

அதிலும் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை வந்தாலும் நம் மக்கள் பறக்கும் இடம் திருப்பதிதான். தற்போது ஏப்ரல் இறுதி வரை பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் மே மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும்.
இந்த நாட்களில் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் பல கி.மீ. தூரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்வர். கொரோனா கால கட்டத்தில் திருப்பதி உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தற்போது திருப்பதிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாதந்தோறும் ரூ 300 தரிசன டிக்கெட்டை திருப்பதி தேவஸ்தான் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. காலை 11 மணிக்கு டிக்கெட் வெளியானது. சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது.
அந்த வகையில் அடுத்த மே, ஜூன் மாதங்களுக்கான ரூ 300 தரிசன டிக்கெட் இன்று வெளியாகிறது. இதை பக்தர்கள் ஆன்லைனில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications