திருமலை திருப்பதியில் அன்னதானம் செய்ய போறீங்களா? ஒரு நாளைக்கான செலவை அதிகரித்த தேவஸ்தானம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ 44 லட்சம் என புதிய விலையை திருப்பதி தேவஸ்தானம் நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 2.5 லட்சம் பேருக்கு திருமலை, திருப்பதி, திருச்சானூரில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி கோயிலுக்கு லட்டு எப்படி பெயர் பெற்றதோ அது போல் சுடச்சுட வழங்கும் அன்னதானமும் மிகவும் பிரபலம். கோயிலில் ஏழுமலையானை கண் குளிர பார்க்கும் பக்தர்கள் வயிறார சாப்பிட கோயிலுக்கு அருகே நித்ய அன்னதான கூடம் இருக்கிறது.

இங்கு பக்தர்கள் இலவசமாக உணவு உண்ணலாம். முன்பெல்லாம் கோயில் பிரகாரத்தில் டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தரிசனம் முடித்துவிட்டு நேராக போய் வரிசையில் நின்று உள்ளே சென்று சாப்பிட்டு வரலாம். அன்லிமிடெட், அவர்கள் பரிமாற பரிமாற சாப்பிடலாம்.
இந்த அன்னதான திட்டம் என்பது அரசர் காலம் முதலே பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. தானத்தில் சிறந்தது அன்னதானம். தற்போது பெரும்பாலான கோயில்களில் அந்த கோயிலின் வருவாய், அன்னதானத்தை ஏற்போர் கொடுக்கும் தொகைக்கேற்ப தொன்னையிலிருந்து வாழை இலையில் வரை உணவு பரிமாறப்படுகிறது.
அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானம் ஆரம்பிக்கப்பட்டதுமே அப்போதைய தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் முதல்வராக இருந்த போது 1983 ஆம் ஆண்டு ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை வங்கிகளில் டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
அப்போது தினமும் 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நன்கொடை கொடுத்து பக்தர்கள் அன்னதான திட்டத்தில் பயன்பெற வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அன்னதானம் செய்வோரின் பெயர்கள் அங்குள்ள டிஜிட்டல் போர்டில் வைக்கப்படுகிறது.
முன்பு ஒரு நாளைக்கு அன்னதான திட்டத்திற்கு ரூ 38 லட்சம் செலவிடப்பட்டு வந்தது. தற்போது அந்த தொகை அதிகரிக்கப்பட்டு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ரூ 44 லட்சம் நன்கொடை என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டிக்கு ரூ 10 லட்சம், மதிய உணவிற்கு ரூ 17 லட்சமாகவும் இரவு உணவுக்கு ரூ 17 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்க நினைத்தால் ரூ 44 லட்சம் கொடுக்கலாம். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வேளைக்கான தொகையையும் நன்கொடையாக கொடுக்கலாம். திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பழைய அன்னபிரசாத கூடம் மற்றும் கோயிலுக்கு வெளியே நிற்கும் பக்தர்கள், மாற்று திறனாளி பக்தர்கள், மூத்த குடிமகன்களுக்கான கூடம், ரூ.300 சிறப்பு தரிசன காம்ப்ளக்ஸ், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதிகளில் அன்னதானம் தினமும் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications