இன்று சந்திரகிரகணம்! திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை ரத்து
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் உலா வரும் கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான கருட சேவை இன்று பவுர்ணமியையொட்டி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இன்று இரவு சந்திரகிரகணத்தையொட்டி இரவு பவுர்ணமி கருட சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இது போல் ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சந்திரகிரகணத்தையொட்டி திருப்பதி கோயிலில் கிரகண தோஷ நிவாரணை பூஜைக்கு பிறகு 8ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 82, 118 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்று ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ 3.97 கோடி கிடைத்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications