விஸ்வரூபம் எடுக்கும் திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரம்! டாய்லெட் கழுவும் ரசாயனம் சேர்ப்பு?
திருப்பதி: திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி) ஆட்சிக் காலத்தில் கழிப்பறைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் நெய்யுடன் கலக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கர்நூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிகனூரில் விவசாயிகளுக்கு 'உங்கள் நிலம் - உங்கள் உரிமை' பட்டாதாரர் பாஸ்புக் விநியோகிக்கும் விழாவில் முதலமைச்சர் நாயுடு பேசுகையில், "ஐந்து ஆண்டுகளாக, அவர்கள் (ஒய்.எஸ்.ஆர்.சி.பி) ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட நெய்யைப் பயன்படுத்தி 'பிரசாதம்' தயாரித்துள்ளனர்.

கழிப்பறைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களைக் கொண்டு அந்த நெய் தயாரிக்கப்பட்டது. சலவை சோப்பு, பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் லினியர் அல்கைல்பென்சீன் சல்போனிக் அமிலம் (LABSA) என்ற ரசாயனத்தை கலந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளது தெரிகிறது.
திருமலை லட்டு நெய் கலப்பட வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) கலப்பட நெய்யை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பால் நிறுவனங்களில் ஒன்றிற்கு LABSA விற்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த ரசாயனம் நெய் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்று SIT அறிக்கை எங்கும் குறிப்பிடவில்லை.
மார்ச் 2022 முதல் மே 2024 வரை ஹர்ஷ் ஃப்ரெஷ் டேரி என்ற நிறுவனம் 8900 கிலோ LABSA-வை வாங்கியுள்ளது. இதுவே சந்தேகத்திற்குரிய பெரிய தொகையாக நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாமாயில், பாம் கர்னல் ஆயில், பால்மோலின், பீட்டா கரோட்டின், அசிடிக் ஆசிட் எஸ்டர், லாக்டிக் ஆசிட் (உணவுத் தரம்), மோனோகிளிசரைடு, நெய் ஃபிளேவர் போன்ற கலப்படப் பொருட்களைக் கலந்து நெய்யைத் தயாரித்தனர் என்று கூறியுள்ளது.
எனினும், 2024-ல் நாயுடு அரசு கூறியது போல, ஆய்வக அறிக்கைகளில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குற்றப்பத்திரிகையில் மேலும், டெல்லியைச் சேர்ந்த அரிஸ்டியோ கெமிக்கல்ஸ் நிறுவனம் LABSA/ஸ்லரி/திரவ சோப்பு ஆகியவற்றை வாங்கி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) கலப்பட நெய்யை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் ஃப்ரெஷ் டேரி நிறுவனத்திற்கு விற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
LABSA வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், ஹர்ஷ் டேரி இதை நெய் தயாரிக்கப் பயன்படுத்தியதாகக் குற்றப்பத்திரிகை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
திருப்பதி லட்டு கலப்பட வழக்கில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.க்கு நற்சான்றிதழ் (clean chit) வழங்கப்பட்டதை மறுத்த நாயுடு, அறிக்கை முழுமையாகப் பரிசோதிக்கப்படவும், தவறுகளைக் கண்டறியவும், பொறுப்பைக் கண்டறியவும் ஒரு நபர் குழுவை அரசு அமைத்துள்ளதாகக் கடந்த வியாழக்கிழமை, பிப்ரவரி 5 அன்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications