Tirupati Laddu: திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் புகார்! அமலாக்கத் துறை வழக்குப் பதிவு
திருப்பதி: திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதை தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த 2024 ஆம் ஆண்டு குற்றம்சாட்டினார்.

இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முந்தைய ஆட்சிக் காலத்தில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்திற்கு விநியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க சிபிஐயின் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. நெய்யில் ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில், இதர பொருட்கள் இருந்ததை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்தது.
இது தொடர்பாக அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்துள்ளது. திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்தும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக திரட்டிய பணம் குறித்தும் விசாரிக்க இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்த ஆவணங்களையும் குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத் துறை ஆய்வு செய்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications