மிகப்பெரிய சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்.. 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு! திருப்பதி போலீஸ் ஆக்ஷன்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரில் திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில்ச்நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாளே ஒரு ஆய்வக ரிப்போர்ட் வெளியானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை பரிசோதனை செய்த ஆய்வகத்தின் அறிக்கையின்படி, மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை திருப்பதி லட்டுவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமானது.
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தரப்பில், தங்களது தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்தத் தயார் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல், நெய் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர விதிகளை கடைபிடிக்க தவறிவிட்டதாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா புகார் அளித்தார்.
திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி, விலங்குகளின் கொழுப்புகள் உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பத்து லட்சம் கிலோ தரமான நெய்யை சப்ளை செய்ய கடந்த மே மாதம் 15 ஆம் தேதி ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 12, 20, 25 ஆகிய தேதிகளிலும், ஜூலை 6, 12 ஆகிய தேதிகளிலும் 4 டேங்கர் நெய்யை அந்த நிறுவனம் அனுப்பி வைத்தது. இதில் முந்தைய ஜெகன் அரசு, ஜூன் மாதம் அனுப்பிய நெய்யை பரிசோதிக்காமல் உபயோகித்தது. இதனால் பக்தர்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன.
இதையடுத்து ஜூலை மாதம் வந்த நெய்யை அதிகாரிகள் என்டிடிபிக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அதில் கலப்படம் இருப்பது நிரூபணம் ஆனது. இதைத்தொடர்ந்து ஜூலை 22, 23, 27 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் எவ்வித கலப்படமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கலப்பட நெய் என தற்போது நிரூபணம் ஆகியிருப்பதால் தேவஸ்தான நிபந்தனைகளை மீறிய ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்பட நெய் அனுப்பியதாக திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவு கலப்படம், மோசடி, மத உணர்வுகளைப் புண்படுத்துதல், குற்றத்தை மறைத்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications