தமிழக அரசியலில் இப்படி நடந்ததே இல்லை.. திருப்பதி சென்ற வேளாண் பட்ஜெட்.. அமைச்சர் வினோத் ட்விஸ்ட்!
திருப்பதி: தமிழக வேளாண் பட்ஜெட்டின் வரைவு நகலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து அமைச்சர் வினோத் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் இப்படி கோயில்களுக்கு சென்று அதன் நகலை வைத்து வழிபாடு செய்வது இதுவரை நடக்காத சம்பவமாகும். இதனால் அமைச்சர் வினோத்தின் செயல்பாடுகள் பேசுபொருளாகி இருக்கிறது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தவெக ஆட்சி அமைத்த பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், சாமானிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மகளிர் உரிமை தொகை ரூ.2,500ஆக உயர்வு, தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், ரேஷன் கார்டுகளுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றாவது இடம்பெறும் என்று எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் வேளாண் பட்ஜெட்டை பொறுத்தவரை பயிர்க்கடன் தொடர்பான முழுமையான தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக முதல்வர் விஜய் தலைமையில் தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. துறை வாரியாக பட்ஜெட்டில் இடம்பெறும் அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகிய இருவரும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில் வேளாண் பட்ஜெட்டின் வரைவு நகலை எடுத்து கொண்டு அமைச்சர் வினோத் திருப்பதி ஏழுமலையான கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார். அமைச்சர் வினோத்தின் செயல்பாடுகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அதன் நகலை எடுத்து கொண்டு சாமி தரிசனம் செய்யும் வழக்கம் இதுவரை தமிழக அரசியலில் இருந்ததில்லை.
ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே வேறு மாநிலம் சென்று அமைச்சர் வினோத் வழிபாடு செய்திருக்கிறார். ஏற்கனவே முதல்வர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கை குறித்த விமர்சனங்கள் உச்சத்தில் இருக்கின்றன. தற்போது விஜய்யின் ஸ்டைலில் அமைச்சர்களும் களமிறங்கி இருப்பது தவெகவினர் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.


Click it and Unblock the Notifications
