நியூ இயர் அன்னைக்கு.. திருப்பதிக்கு போறீங்களா? தரிசன நடைமுறையில் புதிய மாற்றம்! தெரிஞ்சுக்கோங்க
சென்னை: புத்தாண்டு அன்று, திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய பலரும் திட்டமிட்டிருக்கின்றனர். இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தரிசன நடைமுறையில் மாற்றம் செய்திருக்கிறது.
திருப்பதியில் தினந்தோறும் 60,000 - 80,000 வரை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை சுமார் 1 லட்சம் வரை உயரும். கடந்த புத்தாண்டு அன்று 69,000 பக்தர்கள் தரிசனம் செய்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டு அன்று தரிசனம் செய்வதற்கு தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதாவது டிச.30ம் தேதி தொடங்கி ஜன.1ம் தேதி வரை இலவச டோக்கனில் தரிசனம் செய்ய விரும்புவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல ஜன.2ம் தேதி தொடங்கி, ஜன.8ம் தேதி வரை, இந்த 7 நாட்களுக்கு இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்த நாட்களில் எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல், பக்தர்கள் நேரடியாக திருப்பதிக்கு வந்து, வைகுண்டம் மண்டபத்தில் தங்கியிருந்து இலவசமாக தரிசனம் செய்யலாம். அதே நேரம் திருப்பதிக்கு வரக்கூடாது என்று, யாரையும் தடுத்து நிறுத்த உரிமை கிடையாது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் கூறியுள்ளார்.
திருப்பதியில் இப்படி கட்டுப்பாடுகளை விதிக்க காரணம் இருக்கிறது. கடந்த ஜன.8ம் தேதி திருப்பதியில் நெரிசல் ஏற்பட்டது. அதாவது ஜன.10-12 வரை வைகுண்ட ஏகாதசி 'துவார தரிசனத்திற்காக' இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. மொத்தம் 1.2 லட்சம் டோக்கன்கள் விநியோகிக்கப்பட இருந்தது.
இந்த டோக்கன்களை பெற, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது ஒரு பக்தருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மீட்க, ஊழியர்கள் சிறிய கேட்டை திறந்தனர். ஆனால், டோக்கன் கொடுக்கத்தான் கேட் திறக்கப்படுகிறது என்று கூட்டம் முந்தி அடித்துக்கொண்டு ஓடி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டது. இதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். பலியானவர்களில் 2 பேர் தமிழர்கள்.
அதேபோல 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, திருப்பதியில் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications