12 மணி நேர வேலை.. திருப்பூர் பெண்களின் கலங்க வைக்கும் கதை தெரியுமா? ரியல் ஸ்டோரி
திருப்பூர்: 12 மணி நேர வேலை சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே திருப்பூரில் 12 மணி நேரம் தான் வேலை செய்கிறார்கள் மக்கள். மற்ற ஊர்களில் 8 மணி நேரம் வேலை என்றால் திருப்பூரில் 10 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் தான் வேலையாக உள்ளது. 12 மணி நேர வேலையால் திருப்பூர் பெண்களின் கலங்க வைக்கும் கதையை கேளுங்கள்.
12 மணி நேர வேலை கொண்டு வரப்பட்டதற்கு திமுக கூட்டணி கட்சியினர், திமுக ஆதரவாளர்கள் என பலரும் பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களை திறந்தாலே 12 மணி நேர வேலை சட்டத்திற்கு எவ்வளவு கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

12 மணி நேர வேலை சட்டத்தை எதிர்த்து தென்குமரி தென்றல் என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"12 மணி நேரம் அவ்வளவு எளிதில்லை.. அதன் பின்னால் இவ்வளவு உழைப்பும் தேவை...
12 மணிநேர வேலைன்னா 9.00 - 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க போல.
திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா?
9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா அவன் 8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி கிடச்சு, பொருள் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும்.
8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும்னா 8.30க்கு ஃபாக்டரிக்குள்ள வந்திருக்கனும் அப்பதான் அட்டனன்ஸ் எண்ட்ட்ரி போட்டு உள்ள போக சரியா இருக்கும்.

8.30 க்கு ஃபாக்டரிக்குள்ள இருக்கனும்னா அவன் 8.20 க்கு பஸ்சிலிருந்து இறங்கியிருக்கனும். அதுக்கு அவன் 8.00 மணிக்கு பஸ் ஏறியிருக்கனும்.
8 மணி பஸ் ஏற அவன் 7.50 க்கு பஸ் ஸ்டாண்ட் வரனும். அதுக்கு அவன் 7.30 க்கு வீட்லிருந்து கிளம்பனும். 7.15 மணிக்கு சாப்பிட்டு முடிச்சிருக்கனும். 6.45 மணிக்கு குளிச்சிருக்கனும். 6.30 க்கு காலைக்கடன் முடிச்சிருக்கனும். 6 மணிக்கு எழுந்திருக்கனும்.
நைட் 9 மணிக்கு மெஷின் ஆஃப் பண்ண பிறகு எடுத்து வெச்சிட்டு 9.15க்கு யூனிட்லர்ந்து வெளியே வந்து, எக்சிட் ரெஜிஸ்டர் பண்ணி ஃபாக்டரிக்கு வெளியே வரும்போது 9.30 ஆகியிருக்கும்.
பஸ்ச பிடிச்சு பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு ஓடி அப்பாடான்னு உக்காரும்போது 10.30 ஆகியிருக்கும். சாப்பிட்டு முடிச்சு பெட்டுக்கு போறப்ப மணி 11 ஆகியிருக்கும். ஆகமொத்தம் தூங்கறதுக்கு கிடைக்கிற மிச்ச நேரம் 7 மணிநேரம்.
பொண்டாட்டி பிள்ளைகளோட ரெண்டு வார்த்த பேசவோ, கொஞ்ச நேரம் டி.வி பாக்கவோ, பக்கத்து வீட்டு மனுஷங்கள எட்டிப் பாக்கவோ, புத்தகம் வாசிக்கவோ நேரம் ஒதுக்கனும்னா மிச்சம் இருக்கிற அந்த ஏழு மணிநேரத்துலதான் கழிக்கனும்.
இதுல வேலைக்கு போற பெண்கள் நிலைமைய யோசிச்சு பாருங்க. காலைல சமைக்கனும், புள்ளைகளுக்கு ஊட்டனும், ஸ்கூல்க்கு கிளப்பனும், புருஷங்கார புடுங்கிக்கு பணிவிடைகள் செய்யனும். இதெல்லாம் முடிச்சிட்டுதான் வேலைக்கு கிளம்பனும்.
அப்படினா அவ எத்தன மணிக்கு எந்திரிக்கனும்?
இப்ப சொல்லுங்க. 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா?
மனுஷங்கள உணர்வுகளற்ற மெசின்களா மாத்தப்போகுற இந்த இரக்கமில்லாத சட்டத்த முறியடிக்க வேண்டும்.." இவ்வாறு தென்குமரி தென்றல் என்பவர் டுவிட்டரில் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications