பல்லடம் சம்பவம்! உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்.. காவல்துறையினரின் பேச்சுவார்த்தையில் தீர்வு
திருப்பூர்: பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் 2வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உறவினர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து உடல்களை பெற அவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். இப்பகுதியின் பாஜக கிளை நிர்வாகியாக இவரது அண்ணன் மோகன்ராஜ் இருந்திருக்கிறார். இந்நிலையில் செந்தில்குமாரிடம் தூத்துக்குடியை சேர்ந்த வெங்கடேசன் டிரைவராக வேலை செய்து வந்தபோது பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. எனவே வெங்டேசனை, செந்தில்குமார் வேலையிலிருந்து நீக்கியுள்ளார். இது வெங்கடேசனுக்கு பெரிய அவமானமாக இருந்திருக்கிறது.

இதற்கு பழிவாங்க நினைத்த வெங்கடேசன், கடந்த 3ம் தேதியன்று இரவு செந்தில்குமாரின் வீட்டின் அருகே அமர்ந்து தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். இதனை தட்டிகேட்ட செந்தில்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். அதேபோல தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள், அண்ணன் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவத்தை பார்த்து சரமாரியாக திட்டியுள்ளனர். இதனையடுத்து இந்த மூவரையும் வெங்கடேசன் மற்றும் அவரது கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டின. குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மறுபுறம் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், இவர்களது உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து 2வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பல்லடத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனை சரிசெய்ய ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடன் போலீஸ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனையடுத்து உடன்பாடு ஏற்பட்டதால் உறவினர்கள் நால்வரின் உடல்களையும் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் 2 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications