திருட வந்த வட மாநில இளைஞர்.. சட்டுன்னு மடக்கி அப்படியே 2 மணி நேரம் உட்கார வைத்த நாய்.. பல்லடத்தில்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டில் திருட முயன்ற வடமாநில இளைஞரை, வீட்டு உரிமையாளரின் வளர்ப்பு நாய், சுமார் 2 மணி நேரம் சிறை வைத்த சம்பவம், அனைத்து தரப்பினரையும் வியப்படைய செய்துள்ளது.
நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வீடுகளில் வளர்ப்பது ஒருசிலருக்கு அலாதி பிரியமாக இருக்கும். குறிப்பாக, நன்றி உணர்வும், பாசத்துடன் இருக்கு நாய்களை வீட்டில் வளர்ப்பதை ஒருசிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். வீட்டில் ஆசையாக வளர்க்கப்பட்டு வரும் நாய்கள், உரிமையாளர்களின் செல்லப் பிள்ளைகளைப் போல அன்புடன் வளர்க்கப்படுகிறது. வீட்டுக்கு காவலனாக இருக்கும் நாய்களை, தங்களது குடும்ப உறுப்பினர்களைப்போல பராமரித்து வருவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

நன்றி விசுவாசம்
இதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக, அந்த நாய்கள், தங்களது எஜமானர்களுக்கு நன்றி விசுவாசமாக இருந்து, வீட்டையும், வீட்டில் உள்ள நபர்களையும் அரண்போல் காத்து வருகிறது. இதற்கு உதாரணமாக, பல்லடம் அருகே ஒரு வீட்டு நாய் விளங்கியுள்ளது. தனது எஜமானரின் வீட்டில் திருட முயன்ற இளைஞரை, சுமார் 2 மணி நேரம் சிறை வைத்து, திருட்டு நிகழ்வதை தடுத்து நிறுத்தியுள்ளது.

திருட முயன்ற இளைஞர்
திருப்பூர் மாவட்டம், பல்லடம், வடுகபாளையம்புதூர் ஸ்ரீனிவாசா நகரைச் சேர்ந்தவர் விவசாயி கோபால். இவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை, இவரது வீட்டின் மதில் சுவரை தாண்டி குதித்து இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதைப் பார்த்த வீட்டில் காவலுக்கு இருந்த நாய், அந்த நபர் மீது பாய்ந்து தாக்கியது. நாயின் ஆக்ரோஷத்தால் நிலைகுலைந்து போன அந்த இளைஞர், செய்வதறியாது திகைத்துள்ளார்.

சிறை வைத்த நாய்
நாய்க்குப் பயந்து குலை நடுங்கிய அந்த இளைஞர், நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் ஆடாமல், அசையாமல் சிலையாக அப்படியே அந்த இடத்தியே அமர்ந்துகொண்டார். அந்த இளைஞர் தப்பித்துவிடாத வண்ணம், அதே இடத்தில் நாயும் அமர்ந்துகொண்டு கண் இமை அசையாமல் முறைத்துப் பார்த்தப்படியே அவரை தடுத்து நிறுத்தியுள்ளது. சுமார் 2 மணி நேரமாக நாயிடம் அந்த இளைஞர் சிக்கித் தவித்துள்ளார்.

போலீசிடம் இளைஞர் ஒப்படைப்பு
காலை 6 மணிக்கு வழக்கமாக வீட்டை விட்டு வெளியே வந்த கோபால், நாயின் சாமர்த்தியத்தை கண்டு மெய்சிலிர்த்து போனார். திருட வந்த இளைஞரை நாய் மடக்கிப் பிடித்ததால் உற்சாகமடைந்த அவர், உடனடியாக அந்த இளைஞரை நாயிடம் இருந்து விடுவித்து, போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து, அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வடமாநில இளைஞர் என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நாயால் கடிபட்டு காயமடைந்த அந்த நபரை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
திருட வந்த இடத்தில் வீட்டில் உள்ள வளர்ப்பு நாயால் 2 மணி நேரம் வடமாநில இளைஞர் சிறை வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications