தஞ்சை பெண்ணின் உடலில் புகுந்த பல்சர் ரமேஷின் ஆவி! பேய்க்கு பிரியாணியும் குவார்ட்டரும் கொடுத்த பூசாரி
திருப்பூர்: திருப்பூரில் விபத்தில் சிக்கி பலியான இளைஞர் ஒருவர் தனது உடலில் ஆவியாக புகுந்ததாக கூறிய இளம்பெண்ணுக்கு மதுபாட்டிலும் பிரியாணியும் வாங்கிக் கொடுத்து பூசாரி ஒருவர் பேய் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த அருள்வாக்கு சுவாமி ஜீ என்ற சாமியார் , தனது ஆசிரமத்தில் பேயை விரட்டுவதாக கூறி பல்வேறு சித்து விளையாட்டுகளை செய்து வருகிறார். இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் பேய் பிடித்திருப்பதாக அவரிடம் தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவருக்கு எப்படி பேய் பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தினார் அந்த சாமியார்.
அப்போது குடிபோதையில் புல்லட் வாகனத்தில் வந்த போது விபத்தில் சிக்கி இறந்த ஒரு இளைஞரின் ஆவி தன்னுள் புகுந்ததாக அந்த பெண் தெரிவித்தார். வேப்பிலையை அடித்து பார்த்தார், பின்னர் ஏதேதோ மந்திரங்களை சொல்லி பார்த்தார். ஒன்றுக்கும் "பேய்" மசிந்தது போல் தெரியவில்லை.

பெண்ணின் பெயர் ரமேஷ்
இதையடுத்து அந்த பெண்ணிடம் உன் பெயர் என்ன என கேட்டார். அதற்கு ரமேஷ் என்றார். நீ எப்படி இறந்தாய் என கேட்டதற்கு (ஆவி கூறுகையில்) டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு பல்சர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். அப்போது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டேன். எனது ஆசைகள் ஏதும் நடக்காததால் யார் உடம்பிலாவது நுழையலாம் என காத்திருந்தேன்.

உடலில் புகுந்த இளைஞர்
அப்போது இந்த பெண் வந்து கொண்டிருந்தார். அவரது உடலில் நான் புகுந்து கொண்டேன் என "ஆவி" கூறியது. உடனே மந்திரவாதி, சரி அந்த பொண்ணு வாழ வேண்டிய பொண்ணு, அதை விட்டுட்டு போக உனக்கு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் வாங்கித் தருகிறேன். என்ன சொல்கிறாய் என சாமியார் அந்த ஆவியிடம் டீல் பேசினார்.

நல்ல டீலிங்
உடனே அந்த ஆவியும் இது நல்ல டீலிங்கா இருக்கே என நினைத்து ஆவியும் ஓகே சொல்லிவிடுகிறது. உடனே குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சாமியார் ஆர்டர் செய்கிறார். அதை அந்த பெண்ணிடம் கொடுத்து குடிக்குமாறும் சாப்பிடுமாறும் கூறுகிறார். தரையில் வாழை இலை போட்டு லெக்பீஸுடன் பிரியாணியை சாமியாரே பரிமாறுகிறார்.

போதையில் தள்ளாட்டம்
சாப்பிட்டவுடன் அந்த பெண் போதையில் தள்ளாடுகிறார். உடனே அவரது முகத்தில் மஞ்சள் தண்ணீரை தெளிக்கிறார் சாமியார். அப்போது கீழே விழும் அவரை சாமியார் தாங்கி பிடிக்கிறார். அப்போது அந்த பெண்ணிடம் உன் பெயர் என்ன என கேட்க, அந்த பெண் தனது உண்மையான பெயரை கூறுகிறார். உடனே அந்த சாமியார் நீ நல்லாயிட்டேம்மா என கூறுகிறார். மேலும் காற்றில் கலந்துள்ள ரமேஷிடம், குவார்ட்டரையும் கோழிக் கறியையும் வாங்கி திண்ணாச்சி, திருப்பியும் இந்த பொண்ணுகிட்ட வந்தே, உன்னை அப்படியே ஓமகுண்டத்தில் இறக்கிவிடுவேன் என கோபத்துடன் மிரட்டுகிறார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications