அதிமுக பொதுக் கூட்டத்திற்கு வாங்க! கோல்டு காயினை எடுத்துட்டு போங்க! வைரலாகும் துண்டுபிரசுரம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைக்க விடுக்கப்பட்டுள்ள விளம்பரம் பெரும் டிரெண்ட்டாக மாறியுள்ளது. அதிமுக பொது கூட்டத்திற்கு வந்தால் தங்க நாணயம் குலுக்கல் முறையில் பெற்றுச் செல்லுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது சோசியல் மீடியாவில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது ஆண்டு பிறந்தநாள் பொதுக் கூட்டம் தமிழகமெங்கும் அதிமுக நடத்தி வருகிறது. அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் இந்த விழாவை நடத்தி வருகிறார்கள்.

அப்போது 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என்றும் திமுக ஆட்சியை எதிர்த்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பொதுவாகவே அரசியல் கட்சி கூட்டம் என்றாலே அங்கு பொது மக்கள் கூடி நின்று பார்ப்பர்.
சிலருக்கு ஆஸ்தான பேச்சாளர்களின் பேச்சுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் வைகோ பொதுக் கூட்டத்திற்கென தனி ரசிகர்களே இருக்கிறார்கள். அது போல் கருணாநிதி, ஜெயலலிதா உள்பட ஒவ்வொரு தலைவர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் தற்போது பொதுக் கூட்டத்திற்கு காசும், பிரியாணியும், மது பாட்டிலும் வாங்கி கொடுத்து ஆட்களை கூட்டி வரும் செயல் நடப்பதாக தெரிகிறது. அது போல் கடந்த முறை அதிமுக பொதுக் கூட்டத்திற்கு வருவோர் உட்காரும் நாற்காலியை கையோடு வீட்டிற்கு எடுத்து செல்லலாம் என்ற அறிவிப்பு வந்தது. எத்தனை அறிவிப்புகள் கொடுத்தாலும் பெரும்பாலும் காலி சேர்கள் நிறைந்து இருந்துள்ளன.
இதை தவிர்க்க அதிமுக பொதுக் கூட்டத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து ஆட்களை வரவழைக்கும் முயற்சி நடந்துள்ளது. ஆனாலும் காலி சேர்கள்தான் இருந்தன. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நாளை மார்ச் 5 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தை அதிமுக நடத்துகிறது.

இதை முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பன் உள்ளிட்டோர் நடத்துகிறார்கள். இந்த கூட்டத்திற்கு பொதுமக்களை அதிகளவில் திரட்ட புதிய யுத்தியை கையாண்டுள்ளனர். ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 நபர்களுக்கு தங்க நாணயம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடன் 300 பேருக்கு வீட்டு உபயோக பொருட்களான மிக்ஸி, குக்கர், கிரைண்டர், பீரோ, ஃபேன், சில்வர் பாத்திரங்கள் குலுக்கல் முறையில் பரிசு பொருட்களாக வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்பு பரிசு வழங்கப்படும் என அதிமுக சார்பில் ஊத்துக்குளி முழுவதும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications