என் மேல எந்த தப்பும் இல்லப்பா! எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலை! அவிநாசி இளம்பெண் ஆடியோவில் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அப்பா என்னை மன்னிச்சிருங்கப்பா, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலை, உங்களுக்கும் அம்மாவுக்கும் நான் பாரமாக இருக்கவும் விரும்பவில்லை என தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ் ஆப் ஆடியோவில் கண்ணீருடன் அவிநாசி புதுமணப் பெண் பேசியது வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

tiruppur crime dowry

திருமணமான நாள் முதல் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவிடம் வரதட்சிணை வாங்கி வரச் சொல்லி கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கொடுமையை தாள முடியாததால் ரிதன்யா, தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இதையடுத்து மனைவியை கவின்குமார் சமாதானம் பேசி அழைத்து சென்றதாக தெரிகிறது. ஆனால் மீண்டும் அந்த பெண்ணை டார்ச்சர் செய்ததாக சொல்லப்படுகிறது.

நாளுக்கு நாள் கணவர், மாமனார்- மாமியாரின் டார்ச்சர் அதிகரித்ததால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற ரிதன்யா, சம்பவத்தன்று காரை எடுத்துக் கொண்டு சென்றார். மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் இருந்தபடியே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக இந்த கார் ஒரே இடத்தில் இருப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீஸார் கார் கதவை திறந்து பார்த்த போது ரிதன்யா மரணமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில்தான் அவர் ரிதன்யா என தெரியவந்தது.

இந்த நிலையில் ரிதன்யா இறப்பதற்கு முன்னர் தனது பெற்றோருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் ரிதன்யா அழுதுக் கொண்டே பேசுகையில் அப்பா என்னை மன்னிச்சிருங்க! போதும், என்னால முடியவில்லை.

நீங்கள் என் மீது கோபப்படுவீங்கன்னு தெரியும். என்னை வெறுத்துவிடுவீர்கள் என்றும் தெரியும். காலம் முழுக்க உங்களையும் அம்மாவையும் கஷ்டப்படுத்திக் கொண்டு வேதனைப்படுத்திக் கொண்டு என்னாலயும் நிம்மதியாக இருக்க முடியாமல் , ஊருக்காக என்னால் ஒருத்தனுடன் (கணவருடன்) இருக்க முடியாதுப்பா!

இதை என் தலையெழுத்து என நினைச்சிக்கிறேன். போதும்! நான் முடிச்சிக்கிறேன் என் லைஃப்பை. பஞ்சாயத்து பேசுவது, கோயிலுக்கு பரிகாரம் செய்ய கூட்டிட்டு போறது, இதனால் எந்த ஒரு பிரச்சினையும் தீராதுப்பா!

எனக்கு உண்மையாகவே வாழ பிடிக்கவில்லை. எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நான் யாரையும் கஷ்டப்படுத்தியது இல்லை. என் வாழ்க்கை ஏன் இப்படி ஆகியிருக்கிறது என்பதும் எனக்கு புரியவில்லை. நான் போகிறேன்ப்பா, இப்படியே இருந்து இருந்து எந்த விதத்திலும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

நான் உங்களுக்கு பிறந்ததே முதல் தப்பு. அந்த குடும்பமே பிளான் போட்டுதான் என்னை திருமணம் செய்து கொண்டார்கள். அவன் பெத்தவங்க கொடுக்கும் மன ரீதியான கொடுமையையும் என்னால் தாங்க முடியவில்லை. கவின் உடல்ரீதியாக கொடுக்கும் டார்ச்சரையும் என்னால் தாங்க முடியவில்லை.

என்னை தினமும் உடல்ரீதியாக டார்ச்சர் செய்கிறான். இதை நான் யாரிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது? கேட்கறவங்களும், வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும், சகித்துக் கொண்டு போ, இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு"னுதான் சொல்றாங்களே தவிர நான் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை யாரும் உணரவில்லை.

நீங்களும் நான் பொய் சொல்வதாக நினைப்பீர்கள். நான் சத்தியமாக பொய் சொல்லவில்லை. நான் நடந்ததை மட்டும்தான் சொன்னேன். எல்லாருமே நாடகம் ஆடுகிறார்கள். என்னை உங்களால் ஏற்கவும் முடியாது, அப்படியே விடவும் முடியாது. அதனால் நான் காலம் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. என் மேல எந்த தப்பும் இல்லப்பா, சத்தியமா இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கலை. என்னால் இந்த வாழ்க்கையை தொடர முடியும் என தோன்றவில்லை. இவ்வாறு அந்த பெண் கண்ணீர் மல்க பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+