மதக் கலவரத்தை தூண்டும் திமுக எம்.எல்.ஏ.. அவரால்தான் ஆரம்பிச்சது - கலெக்டரிடம் பாஜக பரபரப்பு புகார்!
திருப்பூர் : திருப்பூர் மசூதி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட திருப்பூர் திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த மசூதிக்கு நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றனர். அப்போது இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு பின்னணியில் திருப்பூர் தெற்கு திமுக எம்.எல்.ஏ செல்வராஜ் இருப்பதாக, பாஜகவினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் பள்ளிவாசல்
திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பள்ளிவாசல் குறித்து 2013ஆம் ஆண்டு முதல் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேற்றைய தினம் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிவாசலுக்கு சீல் வைக்கச் சென்றனர். அப்போது இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்கள் போராட்டம்
வேலம்பாளையம் பகுதி மட்டுமல்லது திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் 7 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்பு வாரிய வழக்கறிஞர்களால் அவசர வழக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து மூன்று நாள் அவகாசம் வழங்கப்பட்டது. திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுவரை பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கக்கூடாது எந்தவிட இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பாஜக
இஸ்லாமியரின் போராட்டங்களுக்குப் பின்னணியில், திமுக எம்.எல்.ஏ செல்வராஜ் இருப்பதாக பாஜக, இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூரில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த மசூதியை மூட வேண்டும்; அங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில், வருவாய்த் துறை அதிகாரிகள் இன்று அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கச் சென்றபோது, இஸ்லாமியர்கள் பலர் ஒன்றாக திரண்டு வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை தடுத்ததோடு, திருப்பூரின் மைய சாலைகள் பலவற்றை மறித்து பொதுமக்களுக்கு மிகப் பெரிய இடையூறு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தது.

திமுக எம்.எல்.ஏ
நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டிய திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ், தீர்ப்புக்கு எதிராக உள்நோக்கம் கற்பித்து பேசியுள்ளதோடு, இரு மதத்தினரிடையே கலவரததைத் 'தூண்டும் விதத்தில்' முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், இந்த மசூதிக்கு சீல் வைத்தால் பதற்றம் உருவாகும் என இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுவது சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் செயலே.

இதுதான் மதசார்பின்மையா?
திமுக ஆட்சிக்கு வந்த பின், பல்வேறு சிறு விதிமீறல்கள் இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் என்று குறிப்பிட்டு பல கோயில்கள் இடிக்கப்பட்டன, மக்கள் உணர்வுகள் புண்பட்டாலும் கூட அதை மீறி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று வசனம் பேசி, தமிழக அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கை எடுத்தது. ஆனால், அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ மக்களை சமாதானப்படுத்த கூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், அனுமதியின்றி கட்டப்பட்ட ஒரு மசூதியை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பைப் புறந்தள்ளி, வேகவேகமாக தீர்ப்புக்கு எதிராக கடிதம் எழுதகிறார் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர். இதுதான் மதசார்பற்ற தன்மையா?

அதிகாரிகளுக்கு இடையூறு
ஓட்டுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்வதும், இந்து மதத்தின் மீதான தவறு போல் இந்துக்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும், திமுக இந்து விரோத கட்சி என்பது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அவர் கூறியது போலவே, இன்று திருப்பூரில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட மசூதியை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடச் சென்ற வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் தடுத்து நிறுத்தப்பட்டு, சாலைகள் மறிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடக்க வேண்டும்
உயர்நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகளை பணியாற்ற விடாமல் தடுத்தவர்கள் மீதும், அவர்களை தூண்டிவிட்ட திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத அடிப்படைவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக அரசு வெண்சாமரம் வீசிக் கொண்டிருப்பது முறையல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்
மேலும், மசூதியை சீல் வைக்க சென்ற அதிகாரிகளை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதற்குப் பின்னணியில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ செல்வராஜ் இருப்பதாக, பாஜகவினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் புகார் அளித்துள்ளனர். திருப்பூரில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்துகொண்டுள்ள திமுக எம்.எல்.ஏ செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications