திண்டுக்கல் பெண்ணுக்கு எமனமாக மாறிய புத்தம் புதிய ஆட்டோ.. திசை மாறிய திருப்பூர் இளைஞரின் வாழ்க்கை
திருப்பூர்: திருப்பூர் பொல்லிகாளிபாளையத்தை சோ்ந்த ரவி என்ற இளைஞர் அண்மையில் தான் ஷோருமுக்கு சென்று புத்தம் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி உள்ளார். அந்த ஆட்டோவிற்கு புதிய பதிவெண் கிடைத்தது. அந்த புதிய பதிவெண் வாங்கிய கையோடு, போயம்பாளையம் சென்றார். அப்போது தான் திருப்பூரில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புதிய ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. இதனால் கனவிலும் நினைக்காத சம்பவம் நடந்தது.
புதிய வாகனங்கள் வாங்குவோர் கவனமாக ஓட்டி செல்ல வேண்டும். ஏனெனில் கட்டுப்பாட்டை இழந்து தவறு நடந்தால், வாங்கியவரின் வாழ்க்கை மட்டுமல்ல எதிரே வருபவரின் வாழ்க்கையும் காலியாகிவிடும். அப்படித்தான் திருப்பூரில் நடந்துள்ளது, திருப்பூர் பொல்லிகாளிபாளையத்தை சோ்ந்த 26 வயதாகும் ரவி என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ஆட்டோ வாங்கி உள்ளார்.

தனது புதிய ஆட்டோவுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய பதிவெண் கிடைத்தது. இதையடுத்து பதிவெண்ணை எழுதி ஆட்டோவில் பொருத்துவதற்காக ஆட்டோவை ஓட்டிக்கொண்டு திருப்பூர் போயம்பாளையம் நோக்கி சென்றார். பின்னர் அங்கு புதிய பதிவெண்ணை நம்பர் பிளேட்டில் எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் தனது வீடு உள்ள பொல்லிகாளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருப்பூர் நெசவாளர் காலனி அருகே ஆட்டோ ரவி வேகமாக வந்த போது, திடீரென்று ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது. அங்கு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்த பயணிகள் கூட்டத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற திருப்பூரில் வசித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த திலகா (70), திருப்பூர் குமாரனந்தபுரம் அப்துல்லா (45), அவருடைய மனைவி பல்கீஷ்நிஷா (40), புளியம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலகா மற்றும் அப்துல்லா ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். மேலும் மகேஸ்வரி, பல்கீஷ் நிஷா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் புதிய ஆட்டோவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications