10 நிமிடங்கள் “கட்” ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி.. பரபரத்த அதிகாரிகள்.. என்ன நடந்தது?
திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையின் சிசிடிவி கேமராக்கள் சுமார் 10 நிமிடங்கள் இயங்காமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என அறிவித்த தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான கால அட்டவணையும் வெளியிட்டது. இதில் முதல் கட்ட தேர்தலிலேயே தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இவிஎம் இயந்திரங்ள் அந்தந்த லோக்சபா தொகுதியில் ஏற்படுத்தப்பட்ட ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரபப்ட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு ஸ்டிராங் ரூம் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பாதுகாப்பு படை மற்றும் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்டிராங் ரூம் அருகிலேயே கட்டுபாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எல். ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு பாதுகாப்பு அறையிலும் பிரத்தியேகமாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களுக்கு தனியே மின்சாரம் வழங்கப்பட்டு தடை ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வருகிறது . திருப்பூரில் இன்று மாலை பெய்த கன மழையில் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு எந்திரங்களின் அறையில் இரவு 8.15 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பவானி சட்டமன்ற தொகுதி இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்விளக்குகள் வெளிச்சம் இன்றி கேமரா காட்சிகள் தெரியாமல் போனது. இதனால் பாதுகாப்பு அறையின் வெளியே காவலில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக விரைந்து சென்று ஜெனரேட்டர் மூலமாக மின்சாரத்தை சீர்படுத்தினர்.
இதன் காரணமாக 10 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். மின்சாரம் மழை காரணமாக தடைபட்டதாகவும், ஜெனரேட்டர் மூலமாக அதனை சரி செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.












Click it and Unblock the Notifications