இன்ஸ்டா வீடியோவுக்கு ‘ஹாஹா’ எமோஜி.. கல்லூரியில் தகராறு! அடியாட்களை ஏவி கொலைவெறியுடன் தாக்கிய மாணவர்!
திருப்பூர்: இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஹாஹா எமோஜி போட்டு கமெண்ட் செய்ததால் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர்கள் கொலைவெறியுடன் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சிலர் தினமும் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் கல்லூரி சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கல்லூரி முடிந்து மாலையில் தனியார் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, விஜயாபுரம் பகுதியில் பேருந்தை நிறுத்திய சிலர் அதில் இருந்த 5 மாணவர்களை கீழே இறக்கி சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இரும்பு கம்பிகளால் தாக்கியதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் என்ற மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 4 மாணவர்களும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தச் சண்டை இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு ஹாஹா எமோஜி பதிவிட்டதால் ஏற்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் சூர்யா இன்ஸ்டாகிராமில் கெத்தாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதற்கு ஜூனியர் மாணவர் கிஷோர் ஹாஹா எமோஜி போட்டு கமென்ட் செய்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஜூனியர் மாணவரை சீனியர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த ஜூனியர் மாணவர் ஆட்களை ஏவி, தன்னை தாக்கிய மாணவர்களை பஸ்ஸை மறித்து இறக்கி கடுமையாக தாக்கியுள்ளார். இதை ஜூனியர் மாணவர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து, தங்கள் கல்லூரி வாட்ஸ் அப் குழுவில் பகிர இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக திருப்பூர் நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அடியாட்கள் வைத்து தாக்கிய கல்லூரி மாணவரை கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஹாஹா எமோஜி போட்டதால் நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications