‛சர்ச்சை’.. ஆணவக்கொலை + செய்தியாளருக்கு வெட்டு.. திருப்பூர் எஸ்பி இடமாற்றத்துக்கு காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சமீப நாட்களாக திருப்பூரில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை மேலெழுந்து வந்த நிலையில், தற்போது அம்மாவட்டத்தின் எஸ்பி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தீவிர அரசியல் களத்தில் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக இரு கட்சிகளும் தமிழக அரசுக்கு எதிராக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இப்படியாக எதிர்க்கட்சிகள் அதிகம் விமர்சித்த விஷயம் திருப்பூர் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னைதான். சமீபத்தில் திருப்பூரில் நடந்த இரண்டு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

District SP change due to increasing law and order problems in Tiruppur

ஆணவக்கொலை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதி கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெருமாள், ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா எனும் இளம்பெண்ணும், பக்கத்து கிராமமான பூவாளூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் எனும் இளைஞரும் திருப்பூரில் வேலை செய்து வந்திருந்தனர்.

இவர்கள் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்திருக்கின்றனர். ஆனால் ஐஸ்வர்யா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. எனவே, திருப்பூரில் வேலைக்கு வந்த இவர்கள் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்திருக்கிறார்கள். பின்னர் நண்பர்களின் உதவியுடன் இருவரும் கடந்த டிசம்பர் 31ல் திருப்பூரில் திருமணம் செய்து கொண்டு பல்லடத்தில் வசித்து வந்தனர்.

ஆனால் இந்த விவகாரம் எப்படியோ ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரிந்திருக்கிறது. எனவே இவர்களை தேடிக்கொண்டு பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஐஸ்வர்யா தங்கியிருக்கும் வீடு தெரியாது. எனவே, பல்லடம் காவல் நிலையத்தில் தங்களது பெண்ணை மீட்டு தருமாறு புகார் அளித்திருக்கின்றனர். புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீஸ், ஐஸ்வர்யா-நவீன் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து, ஐஸ்வர்யாவை மட்டும் மீட்டு கொண்டு வந்து பெற்றோருடன் அனுப்பி வைத்திருக்கிறது.

அடுத்த நாள் ஐஸ்வர்யா ஊர் ஒதுக்குப்புறமாக உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளார். போலீஸ் வருவதற்குள் ஐஸ்வர்யாவின் உடலை எரித்து சாம்பலாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பட்டமான சாதிய ஆணவ படுகொலை என சமூக அமைப்புகள் குரல் எழுப்ப, தஞ்சை போலீஸ் விசாரணையில் இதனை உறுதி செய்தது.

இந்த படுகொலைக்கு காரணம், பல்லடம் காவல் ஆய்வாளர்தான் என்று விமர்சனங்கள் எழவே, காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

செய்தியாளர் மீது தாக்குதல்: திருப்பூர் மாவட்டத்தில் நடந்த இரண்டாவது சம்பவம், செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவத்தின் மூலம் இக்கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் தனியார் செய்தி ஊடகத்தின் செய்தியாளராக நேசபிரபு எனும் இளைஞர் பணியாற்றி வந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக இவர் செய்தி சேகரிக்க செல்லும் இடங்களில் மர்ம நபர்கள் இவரை நோட்டம் விட்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி இவரை தேடி மர்ம நபர்கள் வீடு வரை வந்திருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டில் இருந்திருக்கவில்லை. இந்த விஷயத்தை அறிந்த நேசபிரபு உடனடியாக அவசர எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்திற்கும் போன் செய்து புகார் அளித்திருக்கிறார். ஆனால் காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாததால், நேரில் வந்து புகார் அளிக்கும்படி மறு முனையில் பேசிய போலீசார் கூறியிருக்கிறார்.

District SP change due to increasing law and order problems in Tiruppur

வீட்டிற்கு சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த நேசபிரபு மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். பல்லடத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற அவர், மீண்டும் போலீசுக்கு அழைத்துள்ளார். போலீசாரிடம் காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம நபர்கள் நேசபிரபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் நேசபிரபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்திருக்கிறார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் விடுத்திருந்த அறிக்கையில்,

"திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணையிட்டுள்ளேன்" என்று கூறி நேசபிரபுவுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தையும் அறிவித்தார்.

ஆக இந்த இரண்டு சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இதை பற்றி தீவிரமான விமர்சனங்களை முன்வைத்தன. இப்படி இருக்கையில், திருப்பூர் எஸ்பியாக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல புதிய எஸ்பியாக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேவையில்லா சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மேலெழுவதை தவிர்க்க இந்த பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+