உழைச்சவங்களுக்கு பதவி இல்ல.. நம்மகிட்ட இருந்து போனாதான் மரியாதை.. திமுக சீனியர்களை சீண்டிய எடப்பாடி!
திருப்பூர் : திமுகவில் உழைத்தவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது. அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குத் தான் பதவி கொடுக்கின்றனர் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தி.மு.கவில் உழைப்புக்கு மரியாதை இல்லை. திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. அதனால் அக்கட்சி தேய்ந்து வருகிறது என ஈபிஎஸ் பேசியுள்ளார்.
அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் பலர் உயர் பொறுப்புகளை வகித்து வரும் நிலையில், திமுகவினரை சூடேற்றும் வகையில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார்.

திமுகவில் பதவி
திமுகவில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு, குறிப்பாக அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவது திமுகவினர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய அமைச்சரவையில் கால்வாசிப் பேர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள், கட்சியின் முக்கிய பதவிகளிலும் மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களே கோலோச்சி வருகின்றனர். இது திமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதனை விமர்சித்துப் பேசியுள்ளார்.

கார்ப்பரேட் கட்சி
திருப்பூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுக தொண்டர்களைத் தான் பிள்ளைகளாக கருதி கட்டிக் காத்து வளர்த்தனர். திமுகவை பொறுத்தவரை அது ஒரு குடும்பக் கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. யார் வேண்டுமென்றாலும் திமுகவில் இடம்பெறலாம். பதவி வாங்கலாம்.

டைரக்டர்கள் - அமைச்சர்கள்
அதிமுகவில் இருந்து எட்டு பேர் திமுகவிற்கு சென்று அங்கு டைரக்டர் ஆகி தற்போது அமைச்சர்களாகி விட்டனர். திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. அது ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் நிறைந்த கட்சி. தொண்டனை மதிக்கக் கூடிய கட்சி அதிமுக தான். அதிமுகவில் தான் உழைப்பவருக்கு விசுவாசமாக இருப்பவருக்கு வீடு தேடி கதவைத் தட்டி பதவிகள் கொடுக்கப்படுகிறது.

அதிமுகவில் இருந்து செல்பவர்களுக்கு
திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவதில்லை. அப்படியே பதவி கொடுத்தாலும் மூத்த அமைச்சர்களுக்கு டம்மி பதவிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி வெளியேறியவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகள் அங்கு வழங்கப்பட்டுள்ளது." என விமர்சித்துள்ளார்.

விஞ்ஞான மூளை
மேலும் பேசிய ஈபிஎஸ், "உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய ஸ்டாலின் தயாராகி உள்ளார். உதயநிதி படத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுள்ளார். படத்தில் நடித்தால் தான் கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடியும். திமுகவினரை பொறுத்த வரைக்கும் விஞ்ஞான மூளை கொண்டவர்கள். திமுக ஆட்சியில் கொள்ளை அடிக்கும் பணத்தை வெள்ளையாக்குவதற்காக உதயநிதி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகம் நசுங்கி வருகிறது
தமிழகத்தில் தற்போது ரெட் ஜெயன்ட் மூவீஸிடம் படத்தை கொடுத்தால் தான் திரையிடப்படும். திரைத்துறையிலும் கமிஷன் வாங்கும் ஒரே கட்சி திமுக தான். திரையுலகம் நசுங்கிக் கொண்டுள்ளது. கட்சியிலும் ஆட்சியிலும் கொள்ளை அடிப்பதற்காக கட்சி நடத்துபவர் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.

உதயநிதி ஸ்டாலின்
ஜவஹர்லால் நேரு பிரதமர், அவரது மகள் இந்திரா காந்தி பிரதமர், அவருடைய மகன் ராஜீவ் காந்தி பிரதமர் இதனை அப்போது திமுக தலைவராக முதலமைச்சராக இருந்த கருணாநிதி கடுமையாக விமர்சித்தார். ஆனால் தற்போது கருணாநிதி முதலமைச்சர், ஸ்டாலின் முதலமைச்சர், எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் என கூறி வருகின்றனர்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications