"திமுக குடும்பத்துக்காக அரசு கேபிள் டிவியை முடக்குகிறார்கள்".. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "கேபிள் டிவி அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் கொடுத்தோம். திமுக ஆட்சியில் டிஆர்பி ராஜாவுக்கு வேண்டப்பட்ட அரிஸ்டோ நிறுவனத்திடம் வாடகைக்கு செட்டாப் பாக்ஸ் வாங்கித் தருகிறார்கள். அதன் வாடகை மிக மிக அதிகம். திமுக குடும்பம் கேபிள் டிவி நடத்துவதால், அவர்கள் அரசு கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்கள்." என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். முதலில் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பி.என்.சாலையில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார்.

EPS Alleges DMK Family Trying to Shut Down Arasu Cable TV to Protect Their Own Business

திருப்பூரில் எடப்பாடி பேச்சு

"இன்று மகிழ்ச்சியான நாள். குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் பிறந்த ஒருவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. தமிழகத்துக்கும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை. இந்த இனிய தருணத்தில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு இயற்கையாக அமைந்திருக்கிறது. முன்னதாகவே திருப்பூர் வடக்கு பிரசார தேதி குறிக்கப்பட்டுவிட்டது. இன்று இந்த மண்ணைச் சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகே திருப்பூர் வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் எல்லாம் நிறைவேற்றினோம். திமுகவின் 52 மாத ஆட்சியில் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்களா? அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை 350 கோடி ரூபாயில் கட்டிக்கொடுத்தோம். தொழிலாளிகள், உழைப்பாளிகள் நிறைந்த பகுதி என்பதால், அவர்களுக்கு அறுவை சிகிச்சை வசதிகளுடன் சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தோம். அதிமுக திட்டத்தை திமுக திறந்துவைத்துள்ளது. நம் பிள்ளைக்கு திமுக பெயர் வைக்கிறது.

சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கேடு அடைந்துவிட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெடும். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். இப்போது போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதை காரணமாக இளைஞர்களின் வாழ்க்கை சூனியமாகிவிடுகிறது. ஆட்சியாளர்களுக்கு இதுபற்றி எல்லாம் கவலையில்லை. நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

குடும்பமே சீரழிந்த பின்னர் இப்போது சொல்கிறார். நாங்கள் சொல்லும்போதே தடுத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஒரு முதல்வர் என்பவர் மக்களை திருத்தி நல்வழியில் கொண்டுவர வேண்டும். ஆனால் ஸ்டாலினுக்கு மக்கள் எக்கேடு கெட்டாலும் தன் குடும்பம் செழிக்க வேண்டும் என்பதே எண்ணம். அரசு நினைத்தால்தான் இதை தடுத்து நிறுத்த முடியும். டிஜிபி ஒருவர் இருந்தார், அவர் கஞ்சா விற்பனையைத் தடுப்பேன் என்று 2.0, 3.0 என்று ஓ போட்டே ஓய்வுபெற்றுவிட்டார், அவரால் முடியாது ஏனெனில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது போதை நடமாட்டம் முழுவதும் தடுக்கப்படும்.

போதை ஆசாமிகளால்தான் சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள். கொங்கு மண்டலத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் முதியவர்கள் கொல்லப்பட்டு, கொள்ளையடிக்கப் படுகிறார்கள். அரசு என்பது விழிப்போடு செயல்பட்டு தடுத்திருந்தால் முதியோர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. தொழிலை நம்பித்தான் இவர்களின் வாழ்வு உள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது, அதேநேரம் விலைவாசி உயர்ந்துவிட்டது. 40% உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. திமுக ஆட்சியில். விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். இந்த அரசு விலைவாசி கட்டுப்படுத்தத் தவறிவிட்டது.

மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். ஆண்டுக்கு 6% உயர்வை மக்கள் மீது சுமத்தியிருக்கிறது திமுக அரசு. அதிமுக அரசின் பல திட்டத்தை திமுக அரசு ரத்துசெய்துள்ளது.
பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 80 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.

கேபிள் டிவி

கேபிள் டிவி அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் கொடுத்தோம். இன்றைய தினம் இணைப்புகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. செட்டாப் பாக்ஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் ஒரு அமைச்சர், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, டிஆர்பி.ராஜாவுக்கு வேண்டப்பட்ட அரிஸ்டோ நிறுவனத்திடம் வாடகைக்கு செட்டாப் பாக்ஸ் வாங்கித் தருகிறார்கள். அதன் வாடகை மிக மிக அதிகம். இதற்குப் பதிலாக புதிய செட்டாப் பாக்ஸ் கொடுத்துவிடலாம். இதிலும் ஊழல் நடக்கிறது. தனியாருக்கு கொடுத்ததால் 300 கோடி ரூபாய் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும்.

திமுக குடும்பம் கேபிள் டிவி நடத்துகின்ற காரணத்தினால், அவர்கள் அரசு கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்கள். அதிமுக ஆட்சியில் 30 லட்சம் கனெக்‌ஷன் இருந்தது, வருமானமும் கிடைத்தது. இன்றைய தினம் 14 லட்சம் இணைப்புகள்தான் இருக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சியில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்கப்படும்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்குசென்று சிகிச்சை எடுக்கலாம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். இந்த பகுதியில் மட்டும் 6 அம்மா மினி கிளினிக் கொடுத்தோம். மக்கள் எங்கு அதிகம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் திறக்கப்படும்.
முதல்வரின் முகவரி திட்டம் என்று 2023 முதல் இந்தாண்டு ஜூலை வரை பல லட்சம் மனுக்கள் வாங்கப்பட்டன, அவற்றில் இன்னும் 9 லட்சம் மனுவுக்குத் தீர்வு காணவே முடியவில்லை. இதற்கிடையே உங்களுடன் ஸ்டாலின் என்று ஒன்று ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே 9 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணவில்லை. இந்த நிலையில் இப்போது 46 பிர்சனைகள் இருக்கிறது, அவற்றை தீர்க்கிறோம் என்று ஏமாற்றுகிறார்கள். நிலுவையில் இருப்பதையே தீர்க்கமுடியவில்லை. புதிதாக வாங்குவதைத் தீர்க்க முடியுமா? எல்லாம் பேப்பரில், டிவியில் வரவேண்டும் என்பதற்காகவே இந்த அரசு செயல்படுகிறது. ஆனால், ஒன்று இப்போதுதான் மக்களைத் தேடி வந்திருக்கிறார் ஸ்டாலின். 46 பிரச்னைகள் இருக்கிறது என்று கண்டுபிடித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

2021 தேர்தலில் 525 அறிவிப்புகள் வெளியிட்டார்கள். எதுவும் செய்யவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் ரத்துசெய்யப்படும் என்றனர், ரத்து செய்யவில்லை. ரேஷனில் சர்க்கரை ஒரு கிலோ கூடுதலாகக் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றனர், குறைக்கவில்லை. அத்தனையும் வெற்று அறிவிப்புகள் தான்.

திமுக நாடகம்

முதல்வர் சொல்கிறார் என்று மக்கள் மனு கொடுத்தார்கள். இந்த மனுக்களுக்கு தீர்வு கண்டிருந்தால் சிறந்த முதல்வர் என்று சொல்லலாம். ஆனால், உங்களுடன் ஸ்டாலின் மனு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆற்றில் கிடக்கிறது, புதுக்கோட்டையில் வடை கட்டி கொடுக்குறார்கள். இதற்காகவா கஷ்டப்பட்டு மனு கொடுக்குறார்கள்..? இதேபோல எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து மனுக்களை வாங்கி பிரச்னையைத் தீர்ப்பேன் என்றார், தீர்த்தாரா? அத்தனையும் நாடகம், ஆசையை தூண்டி வாக்குகளை பெறுவதற்கு மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறுகிறது.

திமுக அரசு என்றால் ஊழல் அரசு. ஊழல் இல்லாத துறையே இல்லை. பத்திரப்பதிவில் பர்சன்டேஜ் போட்டு வாங்குகிறார்கள். அவர்களே கஷ்டத்துக்குதான் வீடு, நிலத்தை விற்பனை செய்கிறார்கள். அவர்களிடம் 10% கேட்டால் எப்படி..? இது, ஏழைமக்களை வாட்டி வதைக்கும் அரசு என்பதே யதார்த்த உண்மை, திமுக ஆட்சி வந்ததுமே பத்திரப்பதிவு துறை இடைத்தரகர்கள் அலுவலகமாக மாறிவிட்டது.

திருப்பூர் வடக்கில், செட்டிபாளையம் ரிங் ரோட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கொண்டுவரப்பட்டது, திருப்பூர் மாநகராட்சியில் 686 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் சுமார் 6 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அங்கேரிப்பாளையம் ரோடு, சக்தி தியேட்டர் ரோடு, ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சாலை 27 கோடியில் அமைத்தோம், பள்ளிக் கட்டிடப்பணிகள் மேர்கொள்ளப்பட்டது, பாலங்கள் கட்டப்பட்டது, பனியன் தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டது.

புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தங்கும் விடுதி ஆகியவை கட்டபப்ட்டது. வேலப்பாளையம் காவல் நிலையம் கட்டப்பட்டது. சிப்காட்டில் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டது, நெசவாளர் ஆதரவு திட்டம் மூலம் உதவிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. மாநில நெடுஞ்சாலை மூலம் சாலைப்பணிகள் 55 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டது. 108 கோடியில் சாலை, மழைநீர் வடிகால், கட்டிடப்பணி, பாலம், பாதாளச் சாக்கடை, பூங்கா, தெருவிளக்குகள் பல்வேறு பணிகள் இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்டது. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

திருப்பூர் பாண்டியன் நகர் முதல் புஷ்பா தியேட்டர் வரை மேம்பாலப் பணிகள் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது, திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்டிக்கொடுக்கப்படும். இப்பகுதி மக்களுக்கு நிலையான பாதுகாக்கப்பட்ட நான்காம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியதும் அதிமுக அரசுதான்.

ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கப்படும். ஏழை, விவசாயத் தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பைபை ஸ்டாலின்" என்று பேசினார்.

பல்லடத்தில் எடப்பாடி பேச்சு

பல்லடம் தொகுதிக்குட்பட்ட என்.ஜி.ஆர் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "ஸ்டாலின் எல்லா கூட்டத்திலும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே, பல்லடம் கூட்டத்தைப் பாருங்கள். அதிமுக கூட்டணி வெற்றிக்கு இம்மக்களே சாட்சி. திமுக எத்தனை கூட்டணி அமைத்தாலும் சரி, அதிமுக மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்கள் நினைத்தால் தான் ஆட்சிக்கு வரலாம். அதிமுக மக்களை நம்பி இருக்கிறது, திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது. தேர்தலில் திமுகவுக்கு சரியான தீர்ப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடத்தில் உள்ளது.

திமுக 52 மாத ஆட்சியில் ஊழல் புரிந்ததுதான் சாதனை. ஊழல் அரசை அகற்ற வேண்டும். 10 ரூபாய் என்றால் யார் ஞாபகம் வரும்? செந்தில் பாலாஜி. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை இதில் ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டது. முழுமையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வருகிறது.

நாட்டில் நகை, பணம் திருடுவார்கள். இந்த ஆட்சியில் உடல் உறுப்பை திருடுகிறார்கள். திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்தது என்று திமுக அரசே கண்டுபிடித்துள்ளது. எனவே, திமுகவினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குப் போயிருந்தால் ஸ்கேன் செய்துகொள்ளுங்கள். வறுமை காரணமாக கிட்னி விற்கும் நிலை இந்த அரசில் வந்துள்ளது. நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். இந்தக்கொடுமை எந்த மாநிலத்திலும் இல்லை. வறுமையைப் பயன்படுத்தி சுரண்டல் நடக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. எல்லா குற்றங்களுக்கும் போதை பொருள் விற்பனை தான் காரணம். நான் பலமுறை சொல்லியும் அரசு செவிசாய்க்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். நாங்கள் சொல்லும்போதே தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், இப்போது முதல்வர் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறார். இப்போது ஞானோதயம் வந்து என்ன பிரயோஜனம்..? போதை அடிமைகளை திருத்துவது சாதாரண காரியமல்ல. அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.

அதிமுக ஆட்சியில் தான் சிறந்த கல்வி கொடுத்தோம். ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த மாவட்டத்தில் கூட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தோம். அதுமட்டுமல்ல, 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் அமைத்தோம். உங்கள் மாவட்டத்தில் கூட ஒன்று திறந்தோம். இவ்வாறு பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம். 2011ம் ஆண்டு 100க்கு 32 பேர்தான் உயர்கல்வி படித்தனர், கல்வியில் புரட்சி மறுமலர்ச்சி ஏற்படுத்தியதால் 2019-20ல் 100க்கு 54 பேர் படித்தனர். தமிழகம் பல துறையில் உயர்ந்து நிற்க அதிமுக ஆட்சியே காரணம்.

பாஜக விழுங்கிவிடும் என்கிறார் ஸ்டாலின்

நாங்கள் கூட்டணி வைத்ததும், அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்கிறார் ஸ்டாலின். இதே திமுக 1999, 2001 ஆகிய தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகித்தது, அப்போதெல்லாம் பாஜக மோசமான கட்சி என்று சொல்லவில்லை. அதிமுக கூட்டணி வைத்தவுடன் பாஜகவை மதவாதக் கட்சி என்கிறார். அவதூறு செய்திகள் வெளியிட்டு ஏமாற்றி வாக்குகளைப் பெற முயற்சிக்கிறார்.

அதிமுக யாருடன் கூட்டணியில் இருந்தாலும் கொள்கை அடிப்படையில்தான் செயல்படும். மதம், ஜாதிக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. உங்களைப் போல நிறம் மாறும் கட்சி இல்லை. உங்கள் உண்மை முகத்தை மக்கள் பார்த்துவிட்டார்கள். இனி ஏமாற்ற முடியாது. இனி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் நிலை எப்போதும் இல்லை, இந்த தேர்தலோடு திமுகவுக்கு முடிவுகட்டப்படும்.
இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? புதிய திட்டம் ஏதாவது இந்த மாவட்டத்துக்கு வந்திருக்கிறதா? நாங்க கொண்டுவந்த திட்டத்தை நிறுத்தியதுதான் விடியா திமுக அரசின் சாதனை. கோழி ஆராய்ச்சி பண்ணை 32 கோடியில் கட்டினோம் செயல்படுத்தவில்லை. நீண்டநாள் கோரிக்கையாக தடையில்லா குடிநீர் வழங்க கேட்டுள்ளீர்கள், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றித் தரப்படும்.

பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், .50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 80 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். பல்லடம் தொகுதியில் மட்டும் 9 கிளினிக் கொடுத்தோம்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்காக இந்த கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று நம் தலைவர்களுக்கு மக்கள் தான் வாரிசு. திமுகவில் வாரிசு அரசியல். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதியைக் கொண்டுவருகிறார்கள். அடிமை அமைச்சர்கள் கருணாநிதி குடும்பத்துக்கு சேவை செய்கிறார்கள்.

ஸ்டாலின் மகன் என்பது தவிர உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? கட்சிக்கு உழைத்தவர்கள் ஓரத்தில் உள்ளனர், எந்த உழைப்பும் இல்லாமல் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் பதவிக்கு வரமுடியும். டெல்லியிலும் கருணாநிதி குடும்பம் தான் கட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும். அதிமுகவில் கிளைச் செயலாளர் கூட முதல்வர், பொதுச்செயலாளர் ஆக முடியும். இது ஜனநாயகக் கட்சி, விசுவாசமாக உள்ளவர்கள், உழைப்பவர்களுக்கு வீட்டு கதவை தட்டி பதவி கொடுக்கும் கட்சி அதிமுக. ஸ்டாலின் அவர்களே, திமுகவுக்கு உழைத்தவர்களுக்கு தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் கிராமப் புறங்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர், கிட்டத்தட்ட 41% பேர் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். வெறும் 9 பேருக்குத்தான் மருத்துவக் கல்வி கிடைத்தது. அத்தகைய ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். இன்று காலை 9 மாணவர்கள் என்னிடம் ஆசி வாங்கிச் சென்றனர்.
கைத்தறி நெசவாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அவர்களுக்கு அதிமுக ஆட்சியில் 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் மானியம் கொடுத்தோம். பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்தோம். கைத்தறி ஆதரவு திட்டம், கைத்தறி துணிகள் தேக்கமடைந்தபோது 350 கோடி ரூபாய் மானியம் கொடுத்தோம். ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை 2019ல் அறிவித்தோம், இரண்டாண்டுக்கு ஒருமுறை கோவை கொடீசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ஏற்படுத்தி நெசவாளர்கள் சிறக்க நடவடிக்கை எடுத்தோம். கொரோனாவில் தனி நிதியுதவி செய்தோம்.

மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 5% உயர்வு. தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.

ஜூலை 7ம் தேதி மேட்டுப்பாளையத்தில் எழுச்சிப்பயணம் தொடங்கினேன். இன்று 150வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 51 நாளில் 150வது தொகுதி. இங்கு அதிகளவு மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். அனைவருக்கும் என் நன்றி. பல்லடம் தொகுதியில், 10 வார்டு பல்லடம் சேர்த்து நான்காவது குடிநீர் திட்டம் ஆயிரம் கோடியில் கொடுத்தோம், ஆரம்ப சுகாதார நிலையம், நொய்யலாற்றில் பாலம், கால்வாய் சீரமைக்கப்பட்டது. பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது என்கிறீர்கள், அதற்காக உயர்மட்டப் பாலம் அமைத்துக்கொடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் 45 கோடி நிதிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டோம், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதிமுக ஆட்சி வந்தபின்னர் புறவழிச்சாலை பணி தொடரும்.மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்" என்று பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+