3 மாதம் இஎம்ஐ செலுத்தாததால் ஆத்திரம்.. வீட்டில் பைனான்ஸ் ஊழியர் செய்த செயல்.. ஆடிப்போன திருப்பூர்
திருப்பூர்: திருப்பூரில் 3 மாதங்கள் வீட்டுக்கடன் தவணையை செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த பிசிஹெச்எப்எல் ஊழியர்கள் "வீடு கடனில் உள்ளது" என வாடிக்கையாளர் வீட்டின் சுவற்றில் பெயிண்ட்டால் எழுதியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நடவடிக்கையை பலரும் கடுமையாக கண்டித்துள்ளனர். கடனை வசூலிக்க இது சரியான முறை இல்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள்.
வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வீடு கட்ட கடன் வாங்குவோர் கண்டிப்பாக கடனுக்கான மாத இஎம்ஐ தொகையை செலுத்த முடியுமா என்பதை உறுதி செய்து வாங்குவது நல்லது. ஏனெனில் இன்றைய சூழலில் அதிக சம்பளம் வாங்குகிறோம் என்று நினைத்து, வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் அதிகப்படியான கடன் வாங்கி வீடு கட்டிவிட்டு, ஒரு கட்டத்தில் இஎம்ஐ கட்ட முடியாமல் வீட்டையே விற்கும் நிலைக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். திடீரென ஏற்படும் வேலை இழப்பு.. குறைந்து போகும் ஊதியம் என்கிற எல்லா நிலையையும் சமாளிக்கக்கூடியதாக உங்கள் கடன் இஎம்ஐ இருக்க வேண்டும்.

வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வீடு கட்ட கடன் வாங்கினால் அல்லது வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கினால், மாதம் தவறாமல் இஎம்ஐ கட்ட வேண்டும். ஒருவேளை கட்டாமல் போனால் அதற்கு அபராத தொகையாக கணிசமாக செலுத்த வேண்டியதிருக்கும். தொடர்ந்து 3 மாதங்களை கடந்து செலுத்தாமல் இருந்தால் வீட்டிற்கே அதிகாரிகள் வந்து விளக்கம் கேட்கும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை கடனை திரும்ப கட்ட முடியாத சூழலில் உள்ளதை அவர்கள் அறிந்தால், சொத்தை ஜப்தி செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அதற்கு உரிய சட்ட முறைகளை பின்பற்றுவார்கள்.
அதாவது உங்களிடம் கடன் தொகையை வசூலிப்பது தொடர்பாகவும், வீட்டிற்கு இஎம்ஐ எத்தனை மாதம் தொடர்ந்து கட்டாமல் போனால் என்ன நடவடிக்கை என்பதையும் கடன் ஒப்பந்தத்தில் தெரிவித்திருப்பார்கள். அதன்படி தான் நடவடிக்கை எடுப்பார்கள்.. அதேநேரம் சில தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் கடனை திரும்ப வசூலிக்க வரம்பு மீறி செயல்படுவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாக திருப்பூரில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூரில் 3 மாதங்கள் வீட்டுக்கடன் தவணையை செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த பிரைமெல் கேப்பிடல் அன்டு பைனான்ஸ் ஊழியர்கள் "வீடு கடனில் உள்ளது" என வாடிக்கையாளர் வீட்டின் சுவற்றில் பெயிண்ட்டால் எழுதியிருக்கிறார்கள். மேலும் அவர் ஒட்டியுள்ள நோட்டீசில் , "முருகேசன் சோமசுந்தரம் முதலியார் பிரைமெல் கேப்பிடல் அன்டு பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால்.. நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் இந்த சொத்து சுவாதீனம் செய்யப்படும் என்பதை கடனாளி உத்திரவாதி மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.. மேலும் இந்த சொத்திலோ அல்லது இந்த சொத்தின் பெயரிலோ எந்த வில்லங்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு கடனில் உள்ளது நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டின் சுவற்றில் பெரிதாக அனைவருக்கும் தெரியும் படி எழுதிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நடவடிக்கையை பலரும் கடுமையாக கண்டித்துள்ளனர். கடனை வசூலிக்க இது சரியான முறை இல்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
