"மாமியார்!" திருப்பூரில் நைசாக பேசி குழந்தை கடத்தல்! 12 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்! நடந்தது என்ன
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து செயல்பட்டு 12 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டுள்ளனர். போலீசார் விரைந்து எப்படி குற்றவாளியைப் பிடித்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் கடத்தல் என்பது நாடு முழுக்கவே ஆங்காங்கே நடந்து வருகிறது. குழந்தைகளைக் கடத்தி குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதிக்கு விற்கும் போக்கு ஆங்காங்கே நடந்து வருகிறது.
குழந்தை கடத்தலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே திருப்பூரில் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை விரைவாகச் செயல்பட்டு மீட்டுள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனை
திருப்பூர் செரங்காடு பகுதியில் வசித்து வரும் பனியன் தொழிலாளி கோபி (30). அவருக்கு சத்யா (28) என்ற மனைவியும் குழந்தை ஒன்றும் இருக்கிறது. சத்யா இரண்டாவது முறையாகக் கருத்தரித்த நிலையில், அந்த தம்பதிக்குக் கடந்த 19ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இவர்கள் அரசு மருத்துவமனையில் இருக்கும் 3ஆவது தளத்தில் உள்ள மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நான் எடுத்துவிட்டு வரேன்
அவருடன் கோபியின் தாய் மாலாவும் இருந்துள்ளார். இரண்டு குழந்தை பிறந்துவிட்ட நிலையில், சத்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி சனிக்கிழமை 3ஆவது தளத்தில் இருக்கும் மகப்பேறு வார்டில் இருந்து 2ஆவது தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது, சத்யா லிப்டில் வந்த நிலையில், குழந்தை எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கே வந்த பெண் ஒருவர் மாலாவிடம், "உங்களுக்கு எடுத்து வர சிரமமாக இருக்கும். நான் குழந்தையை எடுத்து வரேன்" என்று கூறியுள்ளார்.

உன் மாமியார் கிட்ட கொடுத்துட்டேன்
அவர் கூறியதை நம்பி மாலாவும் குழந்தையைக் கொடுத்துள்ளார். இரண்டாவது தளத்தில் இருந்து சத்யா அந்த பெண்ணிடம் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், "உங்க மாமியாரிடம் கொடுத்துட்டேன்" என்று பொய் கூறிவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேகவேகமாக கீழே இறங்கிச் சென்றுவிட்டார். மாமியார் கீழே வந்த போது அவரிடம் குழந்தை இல்லாததைக் கண்டு சத்யா அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தை கடத்தல்
மாமியாரிடம் கேட்டதற்கு, குழந்தையை எடுத்துக்கொண்டு இறங்கச் சிரமமாக இருந்ததால் அந்த பெண்ணிடம் கொடுத்தாக தெரிவித்துள்ளார். தனது குழந்தையை அந்த பெண் கடத்திவிட்டதை உணர்ந்த சத்யா அலறத் தொடங்கினார். இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் உடனடியாக தெற்கு உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.

12 மணி நேரத்தில்
சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், குழந்தையைக் கடத்தியது இடுவாய், வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அங்கே சென்ற போலீசார், விசாரித்ததில் அவர் குழந்தை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவரிடம் இருந்த குழந்தையை மீட்டனர். குழந்தை கடத்தப்பட்டு வெறும் 12 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட திருப்பூர் போலீசார் பாராட்டி வருகின்றனர்.

எதற்காக
42 வயதான பாண்டியம்மாளுக்கு மகன் ஒருவர் இருந்துள்ளார். அவர் கடந்த 2021இல் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனால் வேதனையில் இருந்த பாண்டியம்மாள் மற்றொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவரை அணுகியிருக்கிறார். இருப்பினும், அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடல் குழந்தை பெறும் நிலையில் இல்லை என்று கூறிவிட்டனர். இது உறவினர்களுக்குத் தெரிந்தால் கேவலமாக நினைப்பார்கள் என்று பாண்டியம்மாள் யோசித்துள்ளார்.

பிடித்தது எப்படி
இதனால் கேட்கும் அனைவரிடமும் தான் கர்ப்பமாக இருப்பதாகவே தெரிவித்துள்ளார். உறவினர்கள் எப்படியும் குழந்தை எங்கே என்று கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதாலேயே குழந்தையைக் கடத்த திட்டமிட்டுள்ளார். சத்யாவின் குழந்தையைக் கடத்த திட்டமிட்ட பாண்டியம்மாள் தன் சகோதரி பிரசவத்துக்காக வந்துள்ளதாகக் கூறி சத்யாவிடம் நெருங்கிப் பழகியதும் தெரிய வந்துள்ளது. குழந்தை கடத்தப்பட்ட செய்தியைப் பார்த்த இடுவாய் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பாண்டியம்மாள் குழந்தையுடன் செல்வதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாலேயே போலீசார் விரைந்து பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications