கிருஷ்ணகிரி, வேலூர், தஞ்சை.. இங்கே என்ன நடக்குது? டாக்டர், ஆசிரியை, வக்கீல் கதி? இந்து முன்னணி வேதனை
திருப்பூர்: தமிழகத்தில் தினசரி படுகொலைகள் நடந்து வருவது கவலை அளிப்பதாகவும், மனிதாபிமானம் கேள்விக்குறியாகி வருவதாகவும் இந்து முன்னணி கவலை தெரிவித்துள்ளது. அத்துடன், மாணவர்களிடையே நல்லொழுக்கம், ஆன்மிகம், உயிர்களிடத்தில் அன்பை ஏற்படுத்தும் பண்பு போன்றவற்றை வளர்க்க வேண்டும் என்றும் இந்து முன்னணி தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சட்டம் ஒழுங்கு தொடர்பான குற்றச் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து, திமுக அரசை கேள்வி எழுப்பி வருகின்றன.

3 நாட்களுக்கு முன்பு, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருந்தார்..
வேலூர்: இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம், வேலூரில் 14 வயதான சிறுமி, தன்னுடைய வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, 3 இளைஞர்கள் சிறுமியின் வாயைப்பொத்தி கல்குவாரி பகுதிக்கு தூக்கிச் சென்று அத்துமீறியிருக்கிறார்கள்.
இதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்களும், குற்றச்சம்பவங்களும் பெருகி வருவதாக எதிர்க்கட்சிகள் தினம்தினம் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.
இந்து முன்னணி: இந்நிலையில், திமுகவை விடாமல் விமர்சித்து வரும் இந்து முன்னணியும், தமிழக அரசை காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"தமிழகத்தில் படுகொலைகள், கூலிப்படையின் கொடூரம், கொலையாளிகள் சரண்டர் என நாளுக்கு நாள் அதிகமாக நடக்கின்றன. இத்தகைய கொலைகளுக்கு காரணம் தனிப்பட்ட விரோதம் என்ற காரணத்தை தமிழக அரசு சொல்லி சமாதானம் தேடுகிறது. கொடூர குற்றவாளிகளை தண்டிப்பதில் காட்டும் அலட்சியம், குற்றச் செயல் செய்வதற்கு தைரியத்தை கொடுக்கிறது என்ற உளவியல் தகவல் உண்மையாகிறது.
சீரியல் கொலைகள்: பள்ளி முதல் ரயில், விமானம் வரையிலான குண்டு மிரட்டல் தொடர்கிறது. இதுவரை, அத்தகையோர் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூலிப்படை அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீரியல் கொலைகள் அதிகரித்துள்ளன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என, தொடர் கொலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளன.
மருத்துவர், ஆசிரியர், வக்கீல்கள் மீது என, ஒவ்வொரு நாளும் நடக்கின்ற கொடூர குற்றங்களை பார்க்கும்போது, தமிழகத்தில் மனிதாபிமானம் செத்துவிட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது. கொடூர குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் விரைந்து செயல்பட வேண்டியது தமிழக போலீசாரின் கடமை.
அமைதி, வளர்ச்சி: தமிழகம் ஆன்மிக பூமி, தர்ம பூமி. எனவே, இத்தகைய மனிதாபிமானமற்ற வன்முறைகள் தொடராமல் இருக்க, மாணவர்களிடையே நல்லொழுக்கம், ஆன்மிகம், உயிர்களிடத்தில் அன்பை ஏற்படுத்தும் பண்பு போன்றவற்றை வளர்க்க வேண்டும். எனவே தமிழக அரசு, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநிலத்தில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications