10 ஆண்டுகால மத்திய ஆட்சியில் திமுக, காங்கிரஸ் இத்தனை செய்ததா? பட்டியல் போட்டு கேள்வி கேட்ட மோடி!
திருப்பூர்: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தையும் காங்கிரஸும் திமுகவும் கொண்டுவரவில்லை என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
திருப்பூர் பல்லடம் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோலை வைத்து உயரிய மரியாதை அளித்தோம். என் மீது தமிழ்நாட்டு மக்கள் அன்பு வைத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கும் எனக்குமான அரசியல் உறவு மட்டுமல்ல. என் இதயத்துடன் இணைந்த உறவாகப் பார்க்கிறேன். பல ஆண்டுகளாக தமிழ்நாட்டுடன் தமிழ் மண்ணுடன் இணைந்து நிற்கிறேன்.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக மத்திய பாஜக அரசு முன்னிரிமை அளித்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு செய்ததை விட 3 மடங்கு அதிகமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வழங்கி உள்ளது.
திமுகவும் காங்கிரஸும் 10 ஆண்டுகாலம் ஆட்சியிலேயே முக்கிய பங்கு வகித்தவர்கள்; நெருங்கிய நட்பு சக்திகளாக இருந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டுக்காக ஒரு நல்ல திட்டத்தை கூட திமுகவும் காங்கிரஸும் கொண்டுவரவே இல்லை.
இன்றைக்கு ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இதனால் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மோடி உத்தரவாதம் என்றால் மக்கள் நினைவுக்கு வருவது 3.5 கோடி பேருக்கு இலவச அரிசி வழங்குவதுதான் நினைவுக்கு வரும்.
தமிழ்நாட்டில் 40,000 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கியதுதான் மோடி உத்தரவாதம் என்றால் நினைவுக்கு வரும். கிராமப் புறங்களில் 6 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளதுதான் மோடி உத்தரவாதம்.
தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தை வழங்கி உள்ளோம். ஜவுளித்துறையில் மிகப் பெரிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதனால் தமிழ்நாடும் மிகப் பெரும் பலனடைந்து
வருகிறது.
"இந்தியா" கூட்டணி மூலம் தமிழ்நாட்டை கைப்பற்றலாம் என நினைக்கிறது காங்கிரஸ். பாதுகாப்பு தளவாடங்களில் கொள்முதல் செய்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் பாதுகாப்பு பொருளாதார வழித்தடத்தை உருவாக்க அனுமதிக்குமா? பாதுகாப்பு வழித்தடம் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தமிழக வளர்ச்சிக்காக உழைத்து வருவதால் என் மீது கடும் கோபம். இங்கே நான் பட்டியலிட்டது எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் கிடைக்குமா? என சிந்திக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications