இனி சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் தூங்காது! கொங்கு மண்டலத்தில் ஆவேசமாக பேசிய உதயநிதி
சென்னை: திமுக சார்பில் பல்லடத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாகச் சாடினார். பல்லடத்தில் திரண்டுள்ள பெண்களைப் பார்த்தால்.. சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் அடுத்த 10 நாட்களுக்குத் தூங்காது என்று அவர் சாடினார்.
இன்னும் 5 மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி திமுக சார்பில் மண்டலம் வாரியாக மாநாடு நடைபெறுகிறது. அதன்படி இன்றைய தினம் திமுக மகளிரணி மாநாடு திருப்பூரில் நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் 39 சட்டசபைத் தொகுதிகளில் இருந்து 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளதாக செந்தில் பாலாஜியை பாராட்டினார். மேலும்,
தலைமை தாங்கும் திமுக மகளிரணி தலைவர் கனிமொழியை அத்தை எனக் குறிப்பிட்டு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, ஆரம்பத்திலேயே அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாகச் சாடினார்.. திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி கூட்டம் எழுச்சிகரமாக நடந்தது என்ற உதயநிதி, அந்த எழுச்சியைப் பார்த்து சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் பயந்து புலம்ப ஆரம்பித்தது என்றார்.
இன்றைய தினம் நடக்கும் மகளிர் கூட்டத்தில் பெருந்திரளான பெண்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்த மகளிர் கூட்டத்தைப் பார்த்தால் சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் அடுத்த 10 நாட்களுக்குத் தூங்காது என்று தெரிவித்தார். திமுக ஆட்சிக்கும் முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கும் பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி என அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications