தாராபுரத்தில் பயங்கரம்.. எரிந்த நிலையில் பெண் சடலம்.. தீ வைத்துக் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எரிந்த நிலையில் கிடத்த மாற்றுத்திறனாளி பெண் சடலம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி பெண்ணை யரேனும் தீ வைத்து கொலை செய்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு பகுதியில் பழைய கோட்டைமேட்டு தெருவில், நகராட்சி குடிநீர் தொட்டி அருகில், 90 சதவீதம் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் இருந்த அந்த பெண் மாற்றுத்திறனாளி என்பதும் அவரது இடது காலில், செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும், தலைமுடி சற்றே வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவருக்கு வயது 65-க்கு மேல் இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த பெண் யார்? எதற்காக நகராட்சி தண்ணீர் தொட்டி அமைந்துள்ள அந்த இடத்திற்கு வந்தார்? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
அதே நேரத்தில், அந்தப் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அந்த தீப்பரவலில் சிக்கி அவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு யாரேனும் தீ வைத்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications