தர்காவில் ஒளிர்ந்த "தீபம்".. சுடர்விட்ட மத நல்லிணக்கம்.. புருவத்தை உயர்த்திய காணூர் கிராம மக்கள்..!
அவிநாசி அருகே தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது
திருப்பூர்: அவிநாசி தர்காவில் ஏற்றி வைத்த கார்த்திகை தீபமானது, பலரது கவனத்தையும் பெற்று வருவதுடன், நெகிழ்ச்சியையும் கூட்டி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெரிய காணூர் என்ற கிராமம் உள்ளது... இங்குள்ள குளத்தின் கரையில் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் தர்கா ஒன்று உள்ளது.
இந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வருவது பல நூற்றாண்டுகளாக தொடரும் வழக்கமாக இருந்து வருகிறது.

சந்தனக்கூடு
திப்பு சுல்தான் ஆட்சியின்போது கட்டப்பட்ட அந்த தர்கா சேதமடைந்ததால், இந்த கிராம மக்களே ஒன்று சேர்ந்து தர்காவை கட்டி உள்ளனர்.. இதற்கு இஸ்லாமிய மக்களுக்கு, பொதுமக்களும் சேர்ந்து உதவி செய்திருக்கிறார்கள்.. தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா என்று இதற்கு பெயர்.. வக்பு வாரியதுடன் இணைக்கப்பட்ட இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

தர்கா விழா
இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வார்கள்.. அப்போது தமிழகம் மட்டும் அல்லது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் இந்த பண்டிகையில் திரளாக கலந்துகொள்வர். அதேபோல, ஒவ்வொரு வருடமும் நடக்கும் கார்த்திகை தீபத்திருநாளின்போது, தங்கள் வீடுகளில் தீபமேற்றிய பிறகு, இந்த தர்காவுக்கும் சென்று அங்கு தீபம் ஏற்றி வைப்பார்களாம்.. அந்தவகையில் இப்போதும் தர்காவில் தீபம் ஏற்றி வைத்துள்ளனர்.

குழந்தை பாக்கியம்
இது குறித்து தீபம் ஏற்றிய அக்கிராம மக்கள் சொல்லும்போது, "திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் காணூர் தர்காவுக்கு வந்து போகிறோம்.. கார்த்திகை தீபத்தின்போது, இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தீபம் ஏற்றுவது வருடா வருடம் நடந்து வருகிறது.. அதன்படி இந்த வருடமும் தர்காவில் தீபம் ஏற்றி உள்ளோம்" என்று நெகிழ்ந்து கூகிறார்கள்..

நல்லிணக்கம்
அதுமட்டுமல்ல, இந்த வருடமும் காணூர் குளத்தில் தண்ணீர் நிரம்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அந்த குளக்கரையிலும் தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.. மதங்களின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அதன் மூலம் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு வரும் சூழலில் பல வருடகாலகமாவே, இக்கிராம மக்கள், தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றிவருவது நெகிழ்ச்சியை தந்து வருகிறது.. மதங்களை கடந்த மனிதத்தையும், இக்கிராம மக்கள் தேசத்திற்கு பறைசாற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications