கொங்கு மண்டல திமுக பூத் கமிட்டி கூட்டம்! செந்தில்பாலாஜி பெயரை உச்சரிக்காத முதலமைச்சர் ஸ்டாலின்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற கொங்கு மண்டல திமுக பூத் கமிட்டி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான செந்தில்பாலாஜியின் பெயரை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்தும் கூட உச்சரிக்கவில்லை.
இது அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் அளித்துள்ளது. நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம் மாவட்ட திமுக செயலாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், கரூர் மாவட்ட திமுக செயலாளர் என்ற முறையில் செந்தில்பாலாஜி பெயரை உச்சரிக்கக் கூட இல்லை.

ஏற்கனவே அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜி நீக்கப்படலாம் என்ற ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், திருப்பூரில் நடந்த இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டல தளபதி என்றெல்லாம் செந்தில்பாலாஜியை அவரது ஆதரவாளர்கள் அழைத்து வந்த நிலையில் அவரது பெயரை சொல்வதையே முதல்வர் தவிர்த்திருக்கிறார்.
கொங்கு மண்டல திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டத்தில் கரூர் மாவட்ட திமுகவினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்னியூர் ராஜேந்திரன் தான் ஆக்டிங் மா.செ.போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே செந்தில்பாலாஜியை காட்டிலும் தன்னால் பிரம்மாண்டம் காட்ட முடியும் என்பதை முதல்வரிடம் நிரூபித்து பாராட்டுக்களை அள்ளியிருக்கிறார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன். பிரியாணி, சிக்கன் 65, என வகை வகையாக 30,000 பேருக்கு விருந்து படைத்து சிறியளவில் கூட குறையில்லாமல் பார்த்துக்கொண்டார் அமைச்சர் சாமிநாதன்.
நிறைகுடம் தளும்பாது என்பதற்கேற்க அமைச்சர் சாமிநாதன் செயல்படுவார் என பாராட்டு மழை பொழிந்துவிட்டு புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு காரணம், டெல்டா மற்றும் தென் மண்டலங்களை காட்டிலும் மேற்கு மண்டல திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் மாநாடு போல் நடைபெற்றதேயாகும்.












Click it and Unblock the Notifications