அதிகாரி அனுப்பிய நோட்டீஸ்! திருப்பூர் மேயர் தலையில் விழுந்த பழி! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் 3வது மண்டல உதவி ஆணையர் செய்த காரியம் ஒன்று மேயர் தினேஷ்குமாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திவிட்டது.
உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அவர் நிரூபிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலையில் அம்பேத்கர் சிலை உள்ளது. அம்பேத்கர் அறிவாலயம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிலை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் அந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ் பஞ்சாயத்தை கூட்டிவிட்டது.
அம்பேத்கர் சிலையை அகற்றச் சொல்லி உதவி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியதே தனக்கு தெரியாது என்றும் தனது கவனத்திற்கு கொண்டு வராமலேயே அந்த அதிகாரி இப்படி செய்துவிட்டார் எனவும் பதறியடித்துக் கொண்டு விளக்கம் அளிக்க வந்த திருப்பூர் மேயர், ஆன் தி ஸ்பாட்டிலேயே உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதேபோல் தனக்குத் தெரியப்படுத்தாமல், இன்னும் என்னென்ன நடவடிக்கைகளை அந்த அதிகாரி தன்னிச்சையாக மேற்கொண்டார் என்பதையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் மேயர் தினேஷ். அம்பேத்கர் சிலையை அகற்றச் சொன்ன விவகாரத்தில் திருப்பூர் மேயர் நேரடியாக சென்று விளக்கம் அளித்திருக்காவிட்டால் இந்த விவகாரம் போராட்டமாக வெடித்து அது திமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இதனிடையே திருப்பூர் மாநகராட்சி சார்பில் முன்னெடுக்கவுள்ள எந்த நடவடிக்கைகளாக இருந்தாலும் அதிகாரிகள் தனது கவனத்துக்கு கொண்டுவராமல் மேற்கொள்ளக்கூடாது என்பதை மேயர் தினேஷ்குமார் கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டாராம்.












Click it and Unblock the Notifications