விஏஓ டூ தாசில்தார்.. திருப்பூரில் 14 வருடம் கழித்து தரமான சம்பவம்.. ஆயுசுக்கும் மறக்க முடியாத தண்டனை
திருப்பூர்: 14 வருடம் முன்பு வெறும் 1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 71 வயதாகும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி இப்போது சிறையில் கம்பி எண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே அடங்கல் சான்று பெற ரூ.1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் உள்ள தனது நிலத்தில் தோட்டக்கலைத்துறை மானிய உதவியோடு பூஞ்செடிகள் பயிரிட முடிவு செய்திருந்தார். இப்படி பயிரிட வேண்டும் என்றால், குறிப்பிட்ட நிலத்துக்கு கிராம நிர்வாக அதிகாரி சான்று, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் தேவையாகும்.

இதற்காக கடந்த 2011-ம் ஆண்டு அந்த ஆவணங்களை பெற ஆனந்தன், காவுத்தம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த குணசேகரன் (வயது 71) என்பவரிடம் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அடங்கல் சான்று வழங்க குணசேகரன் ரூ.1,500 லஞ்சமாக கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. விஏஓ குணசேகரன் அப்போது விருமாண்டம்பாளையம் கிராம நிர்வாகத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்த சூழலில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ஆனந்தன், இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ரசாயன பொடி தடவிய ரூ.1,500-ஐ போலீசார் ஆனந்தனிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இதனிடையே கடந்த 22-11-2011 அன்று விருமாண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில், குணசேகரன் தனது டிரைவரான சதீஷ் (41) என்பவர் மூலமாக ரூ.1,500 பெற்றிருக்கிறார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குணசேகரன், சதீஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி வந்தார்கள்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஓய்வு பெற்ற விஏஓ குணசேகரனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சதீசுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற 10 வருடங்கள் கழித்து விஏஓவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. விஏஓ, சர்வேயர், தாசில்தார் யாராக இருந்தாலும், லஞ்சம் வாங்கி கைதான வழக்கில் சிக்கினால் ஓய்வு பெற்ற பின் வழக்கை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் சிறைதண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க உள்ள சட்டத்தை ஒவ்வொரு சாமானிய மக்களும் பயன்படுத்த தொடங்கினால் கண்டிப்பாக லஞ்சப்பிரச்சனைக்கு முடிவு வரும் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications