திருப்பூர், கோவைக்கு வரப்பிரசாதம்.. மத்திய அரசின் 45 ஆயிரம் கோடி ஏற்றுமதி திட்டத்தால் என்ன நன்மைகள்
திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம், சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள கோவை மற்றும் திருப்பூர் போன்ற ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நகரங்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும். சுமார் 45000 கோடி மதிப்புள்ள இரண்டு திட்டங்கள் காரணமாக மலிவான வர்த்த கடன் கிடைக்கும். பிணையமற்ற கடன் உத்தரவாதம், வட்டி மானியமும் கிடைக்க போகிறது. முழுமையாக பார்ப்போம்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம், ஏற்றுமதியாளர்களுக்கு கடன் உத்தரவாத திட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இந்தியாவில் தயாரிப்பு என்பது உலக சந்தையில் இன்னும் சத்தமாக எதிரொலிப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம், சர்வதேச ஏற்றுமதி போட்டியை அதிகரிக்கும்.

மோடி பதிவு
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், முதல்முறை ஏற்றுமதி செய்பவர்களுக்கும், தொழிலாளர் சார்ந்த துறைகளுக்கும் உதவும். அத்திட்டம், பயனுள்ள வழிமுறையை கட்டமைக்க முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கும். மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாத திட்டம், சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கும். சுமுகமான வர்த்தக செயல்பாடுகளை உறுதி செய்யும். 'தற்சார்பு இந்தியா' என்ற நமது கனவை நனவாக்க உதவும்'. இந்த முடிவு, வினியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை பெருக்கும்" இவ்வாறு மோடி கூறியிருந்தார்.
அமித்ஷா நம்பிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறுகையில், மத்திய அமைச்சரவை ரூ.45 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது, ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த முடிவு, இந்த துறையில் சர்வதேச போட்டியை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நோக்கிய உறுதியான நடவடிக்கை" என்று கூறினார்.
கோவை திருப்பூருக்கு என்ன நன்மை
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது போலவே ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் பல்வேறு சிறுகுறு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும். அந்த வகையில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் இரண்டுமே சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த இரண்டு நகரங்களில் இருந்து ஜவுளி மற்றும் என்ஜினியரிங் உதிரிபாகங்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. எனவே மத்திய அரசின் திட்டதால் கோவை, திருப்பூர் அதிக பலன் பெறும்.
சிறு குறு நிறுவனங்கள் கோவை திருப்பூரில் அதிகம்
திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் MSME என்று அழைக்கப்படும் சிறுகுறு நடுத்த நிறுவனங்களில் பிரிவில் வரும். எனவே மத்திய அரசின் ஏற்றுமதி திட்டத்தின் ஒரு பகுதியான 'நிரயாத் ப்ரோத்சாஹன்', கொங்கு மண்டலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு, மலிவான வர்த்தகக் கடன் கிடைப்பதை உறுதி செய்யும்.
வட்டி மானயம்
இத்திட்டம் மூலம் கடன் மீதான வட்டி மானியத்தை வழங்குவதால், ஏற்றுமதிக்கான மூலதனச் செலவு நிறுவனங்களுக்கு கணிசமாக குறையும். இந்த முயற்சியால் உலகச் சந்தையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டிபோட முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
புதிய கடன் உத்தரவாதத் திட்டம்
மேலும் புதிய கடன் உத்தரவாதத் திட்டம் மூலம், ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக MSME-களுக்கு, கூடுதல் பிணையமற்ற கடன் வசதி கிடைக்க போகிறது. இது அவசரகால செயல்பாடுகளுக்கும், அதிக ஆர்டர்களைச் சமாளிக்கவும் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் நிச்சயம் உதவும்.
அதேபோல் 'நிரயாத் திஷா' என்ற மத்திய அரசின் திட்டம், புதிய சந்தைகளை கண்டறியவும், சர்வதேச சந்தையில் இந்தியப் பொருட்களின் தெரிவுநிலையை மேம்படுத்தவும் உதவும் என்று தொழில் முனைவோருக்கு நம்பிக்கை அளிக்கும்.
சர்வதேச தரம்
அதேபோல் சர்வதேச ஏற்றுமதி தரநிலைகள் மற்றும் சான்றிதழ்களுக்கான உதவிகளை மத்திய அரசே வழங்குவதன் காரணமாக, திருப்பூர் மற்றும் கோவை போன்ற உற்பத்தி சார்ந்த நகரங்கள், தங்கள் தயாரித்த பொருட்கள் மற்றும் உடைகளை உலகத் தரம் வாய்ந்தவை என்பதை உறுதிப்படுத்த முடியும்.
அமெரிக்காவை சமாளிக்க திட்டம்
இந்த ஏற்றுமதி திட்டத்தைத பொறுத்தவரை அமெரிக்கா விதித்துள்ள உயர் வரியைச் சமாளிப்பதற்காகவே சிறப்பு கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அமெரிக்க சந்தையில் திருப்பூர் மற்றும் கோரவை ஏற்றுமதியாளர்களின் பாதிப்புகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் நவீனமயமாக்கல்
அதேபோல் அரசின் திட்டம் காரணமாக ஏற்றுமதி கிடங்குகள் மற்றும் தளவாட வசதிகள் மேம்படுத்தப்படும். இதனால், சரக்குகளை விரைவாகவும், குறைந்த செலவிலும் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்ல நிறுவனங்களால் முடியும். அதேபோல் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மத்திய அரசிடம் இருந்து நிறுவனங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
ஒரே வரியில் சொல்வது என்றால் இந்த ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரின் ஏற்றுமதியாளர்களுக்கு நிதி, சந்தை மற்றும் தொழில்நுட்ப ரீதியான பலங்களை வழங்கும். இதன் மூலம், அவர்களின் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்தி, அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். அதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications