திருப்பூரே திரும்பி பார்த்த சம்பவம்! விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில்.. நெகிழ வைத்த இஸ்லாமியர்கள்
திருப்பூர்: இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கள், இந்து மதவாத அமைப்புகளால் தொடர்ந்து பேசப்பட்டு வருவது கவலையை ஏற்படுத்தியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வரும் நிலையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. குறிப்பாக திருப்பூரில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 தட்டுகளில் இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான இடைவெளியை மதவாத அமைப்புகள் பயன்படுத்தி, இரு தரப்பு மக்களையும் சேர விடாமல் தடுக்கின்றனர் என்று ஜனநாயக அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.

ஆனால், மதவாத அமைப்புகளுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து களமாடி வருகிறது என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்த நம்பிக்கையை மேலும் உறுதி செய்யும் விதமாக சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக திருப்பூரில் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
திருப்பூர் 15 வேலம்பாளையம் ஊருடையம்மன், விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் 11 தட்டுக்களில் சீர் வரிசை வழங்கியுள்ளனர். இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி 15 வேலம்பாளையம் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்கள் சார்பில் இந்த சீர்வரிசை வழங்கப்பட்டிருக்கிறது.
பள்ளிவாசலின் தலைவர் அப்துல் சமது தலைமையில் பள்ளிவாசல் செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் சித்தீக் உட்பட இஸ்லாமியர்கள் பலர், பள்ளிவாசலிலிருந்து 1 கி.மீ தூரம் சீர்வரிசை தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக சென்று வழங்கினர். இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இது குறித்து மசூதி தலைவர்கள் கூறுகையில், "கோயில் தலைவர்கள் நேரடியாக வந்து எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழாவை சிறப்பிக்க வந்திருக்கிறோம். இது மத நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications