அதிர்ந்த திருப்பூர்! தூக்கி வீசப்பட்ட சிறுமி.. போலீஸ் வாகனம் மோதி பலி! பள்ளி முடிந்தபின் பரிதாபம்
திருப்பூர்: பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்த 6 வயது சிறுமி போலீஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் காங்கேயம் சாலையை ஒட்டிய நல்லூரை அடுத்த விஜயாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி. இவரது மகள் திவ்யதர்ஷினி. 6 வயது சிறுமியான இவர் விஜயாபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்து உள்ளார். இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து ராஜேஷ்வரி தனது குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது காவல் துறை வாகனம் எதிரே வந்து இருக்கிறது. அது பைக்கின் மீது மோதியதில் பின்னால் அமர்ந்து வந்த சிறுமி தடுப்புச்சுவற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இந்த விபத்தில் 6 வயது பள்ளி மாணவி திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விபத்து ஏற்படுத்திய திருப்பூர் போலீஸ் வாகனத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிறைபிடித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழந்த சிறுமி திவ்ய தர்ஷினி மரணத்துக்கு நியாயம் கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டு இருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
போலீஸ் வாகனத்தை இயக்கி வந்தவர் வீட்டுக் காவலர் என்று கூறப்படுகிறது. வீட்டுக் காவலர் போலீஸ் வாகனத்தை இயக்கி வருவதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விபத்தை நேரில் பார்த்த மக்கள் போலீஸ் வாகனம் வேகமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
அப்போது எதிரே மாணவி வந்த இருசக்கர வாகனம் வளைவில் திரும்பும்போது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த சிறுமி தடுப்புச் சுவற்றின் மீது மோதி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளார் என நேரில் பார்த்த மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் தொடர்ந்து போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், விபத்துக்கான உண்மையான காரணத்தை அறிய அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications