திருப்பூர் அரசு பஸ்ஸில் கூனிக்குறுகிய பெண்கள்.. விடியல் இலவச திட்டத்தில் ஊழியர் இப்படி? உடனே ஆக்ஷன்
திருப்பூர்: தமிழ்நாடு அரசின் விடியல் பயணத் திட்டத்தில் நிலவும் டிக்கெட் குளறுபடிகள் மற்றும் ஊழியர்களின் அநாகரிகமான நடத்தையினால் பெண் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பஸ்ஸில் பெண் பயணிகளிடம் தேவையற்ற அபராதங்களும், ஊழியர்களுடனான வாக்குவாதங்களும் தொடர்கதையாகி வருகின்றன. எனவே, இத்திட்டத்தின் முழுப்பயனும் பெண்களுக்குச் சென்றடைய டிக்கெட் வழங்கும் முறையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது... இதோ இந்த திருப்பூர் சம்பவத்தை பாருங்கள்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இலவச பேருந்து பயணத்தில் ஒரு சர்ச்சை சம்பவம் நடந்தது.. திருநெல்வேலி டவுன் பகுதியில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்ற அரசுப் பேருந்தில், இரண்டு பெண் பயணிகளுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

"ஜீரோ டிக்கெட்" நடைமுறை சிக்கல்
மகளிர் இலவசப் பயணத் திட்டத்தின் கீழ் "ஜீரோ டிக்கெட்" வைத்திருக்கவில்லை என்ற காரணத்திற்காக டிக்கெட் பரிசோதகர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு முக்கியமான நடைமுறைச் சிக்கல் இருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இலவச பயணம்
பொதுவாக பஸ்களில் குழுவாக ஏறும் பெண்களுக்கு கண்டக்டர்கள் தனித்தனியாக டிக்கெட் வழங்காமல், அனைவருக்கும் சேர்த்து ஒரே டிக்கெட்டாக வழங்கிவிடுகின்றனர். அந்த டிக்கெட்டை வைத்திருக்கும் பெண் தனது பஸ் ஸ்டாப் வந்ததும் இறங்கிவிடுவதால், அவருடன் வந்த மற்ற பெண்களிடம் டிக்கெட் இருப்பதில்லை. இதுபோன்ற ஒரு சூழலில்தான் இந்த 2 பெண்களும் அன்றைய தினம் சிக்கிவிட்டார்கள்..
இது குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், இலவசப் பயணம் என்றாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனியாக டிக்கெட் வழங்கப்பட வேண்டும் என்பது விதி என்று கூறினர். இருப்பினும், இது போன்ற சூழல்களில் பயணிகளுக்கு அபராதம் விதிக்காமல் எச்சரித்து அனுப்பியிருக்கலாம் என்றும், இனி இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க ஊழியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
விடியல் பயணத் திட்டம்
இப்போது மற்றொரு சர்ச்சை சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.,. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கிச் சென்ற டி.என். 39 என் 0659 எண் கொண்ட நகரப் பேருந்தில் ஏறிய பெண் பயணிகளிடம் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அரசு பஸ் பயணம்
காங்கேயம் ஹாஸ்டல் ஸ்டாப் பகுதியில் ஏறிய பெண்கள் சிலர், அடுத்து வரும் மெடிக்கல் ஸ்டாப் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் எனக்கூறி "விடியல் பயணத் திட்ட" டிக்கெட் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த பஸ்ஸின் ஊழியர்கள், "இரண்டு ஸ்டாப்பிங் தானே இருக்கு? ஏன் உங்களால் நடந்து செல்ல முடியாதா? எனக் கேள்வி எழுப்பியதுடன், பெண்களுக்கு டிக்கெட் தர மறுத்துள்ளனர்.. அத்துடன் நேராக பஸ் ஸ்டாண்டிற்கே பெண்களை அழைத்து சென்று, அங்குள்ள டிக்கெட் பரிசோதகரிடம் உங்களை ஒப்படைப்போம், 500 ரூபாய் அபராதம் கட்டினால்தான் நீங்களெல்லாம் திருந்துவீர்கள் என்றும் இழிவாக பேசியிருக்கிறார்கள்..
2 பெண்களுக்கு டிக்கெட் மறுப்பு
இதனால் பஸ் ஸ்டாண்டில் கண்டக்டருக்கும், அந்த பெண் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.. உடனே அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளும் போலீசாரும் தலையிட்டுச் சமாதானம் செய்தனர். இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட, அது வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பெண் பயணிகளை இழிவாகப் பேசிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர்.. இதையடுத்து, திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேருந்தின் கண்டக்டர், டிரைவர் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கவும் அவர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications