அமெரிக்காவின் 500 சதவீதம் வரி.. 10 வருடங்கள் திருப்பூரை அடியோடு முடக்கும்.. ஏற்றுமதியாளர்கள்
திருப்பூர்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அந்த வருமானம் மூலம் உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் இருக்கும் நாடுகளுக்கு அவ்வப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிகளை கூடுதலாக விதித்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 500 சதவிகித வரி விதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால் 45 சதவிகித ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் என்றும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும், இதனை சரி செய்ய 10 ஆண்டுகள் தேவைப்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அந்த வருமானம் மூலம் உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் இருக்கும் நாடுகளுக்கு அவ்வப்போது அமெரிக்க அதிபர் வரிகளை கூடுதலாக விதித்து வருகிறார். இதில் இந்தியாவுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா போன்ற நாடுகளுக்கு கூட இந்த அளவு வரி இல்லாததால், இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்க அமெரிக்க வர்த்தகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

முன்னதாக கொடுக்கப்பட்ட ஆர்டர்களும் விலைச் சலுகை பெற்று வாங்கி வருகின்றனர். இதில் பெருமளவு பாதிக்கப்பட்ட துறையில் ஜவுளித்துறை முக்கியமானதாக விளங்குகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது. மேலும் புதிய டிசைன் மற்றும் கால நிலைக்கு ஏற்ற ஆடைகள் என ஆண்டு முழுவதும் விற்பனையாகும் இந்த ஆடை ஏற்றுமதி பிரிவில் இருந்து மட்டும் அமெரிக்காவுக்கு 45 சதவிகித ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
அதிலும் குறிப்பாக பின்னலாடையை பொறுத்தவரை திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதில் அமெரிக்காவிற்கு மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஐரோப்பா ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் 2000 முதல் 5000 டி-ஷர்ட்டுகள் ஒரு ஆர்டரில் வாங்கப்பட்டால் அமெரிக்காவின் ஒரு ஆர்டர் ஒரு லட்சம் இரண்டு லட்சம் டி-ஷர்ட்டுகள் என அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதனால் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு குறையாமல் திருப்பூர் ஏற்றுமதியில் வேகமாக முன்னேற வழி வகுத்தது.
அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்கள் என்பதால் மிகக் குறைந்த லாப விகிதத்தில் இந்த ஆர்டர்கள் ஆண்டு முழுவதும் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு காரணமாக திருப்பூரில் இருந்து பொருட்களை வாங்கி வந்த அமெரிக்க வர்த்தகர்கள் ஆர்டர்களை தொடர முடியாமலும் விலையை அங்கு உயர்த்த முடியாமலும் விலை குறைத்து வழங்க கோரிக்கை விடுத்தனர்.
அதே நேரத்தில் அமெரிக்கர்கள் கொடுத்த அளவில் தைக்கப்பட்ட ஆடைகளை மற்ற நாடுகளுக்கோ அல்லது உள்நாட்டிலோ மாற்றி விற்பனை செய்ய முடியாது என்பதால் ஆர்டர் ரத்து செய்யப்பட்டால் கடும் இழப்பை சந்திக்க வேண்டும் என்ற நிலையில் வேறு வழி இன்றி பல ஏற்றுமதியாளர்கள் விலையை குறைத்து கொடுத்து பலர் லாபமின்றியும் சிலர் நஷ்டத்தையும் சந்தித்தனர். தற்பொழுது இருக்கும் சில ஆர்டகளும் இந்த மாதம் முடிவடைந்து முழுமையாக அனுப்பி வைக்கப்பட்டால் அடுத்த கட்ட ஆர்டர்கள் முற்றாக இல்லை என்பதே உண்மை நிலை.
எனினும் வரி குறைப்பு அறிவிக்கப்படும் என அமெரிக்க வர்த்தகங்களும், திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் தொடர்ந்து எதிர்பார்த்து வந்த நிலையில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 500 சதவிகித வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அடுத்த சில நாட்களில் அமெரிக்க இரு அவைகளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 45% ஏற்றுமதி முழுமையாக ரத்தாகும் அபாயம் உள்ளதாகவும், இதனால் திருப்பூரில் 30 சதவிகித ஏற்றுமதி நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை கிடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு மாற்றாக இந்திய அரசு 6 நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில் ஐரோப்பா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டாலும் 45 சதவிகித ஏற்றுமதியை எட்ட 10 ஆண்டுகள் வரை தேவைப்படும் எனவும் தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுக்க மாநில அரசு மத்திய அரசு வலியுறுத்தி ஜவுளித்துறைக்கு கூடுதல் சலுகைகளை பெற்றுத் தர வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.. வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் பல நாடுகளிடம் செயல்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும்.. மேலும் அமெரிக்க அரசுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications