கோவைக்கே சவால் விடப்போகும் திருப்பூர்.. 2.60 லட்சம் சதுர அடியில் ரெடியான பிரம்மாண்டமான 'மால்'
திருப்பூர்: தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான மால் உள்ள நகரம் என்றால் அது சென்னை தான்.. சென்னையில் மிகப்பெரிய மால்கள் அதிக அளவில் உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகமான மால்கள் உள்ளன. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தற்போது திருப்பூரில் மிகப்பெரிய மால் ரெடியாகிவிட்டது. 2.60 லட்சம் சதுர அடியில் , ஐந்து சினிமா தியேட்டர்கள், உணவகங்களுடன் ரெடியாகி உள்ளது.
அண்மைக்காலம் வரை மால்கள் என்றால், சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, அஹமதாபாத், புனே உள்ளிட்ட இந்தியாவின் எட்டு மெட்ரோ நகரங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த மால்கள் எல்லாம், இந்தியாவின் இரண்டாவது தர நகரங்கள், மூன்றாவது தர நகரங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகவேகமாக நகரமயமாகி வரும் மாநிலம் ஆகும். தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரங்கள் என்றால், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் ஆகிய நகரங்கள் தான்.

இதில் கோவையை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரமாகும். அங்கு லூலு மால், ஃபன் பால், புருக்பீல்ட் மால், ப்ரோஜோன் மால், பிராட்வே மெகா பிளக்ஸ் என ஐந்து மால்கள் வந்துவிட்டது. மால்களை பொறுத்தவரை அதிகப்படியான மக்கள் உள்ள நகரம் மற்றும் மக்கள் அதிகமான பணம் செலவு செய்வதற்கு தயாராக உள்ள நகரங்களில் தான் அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கோவைக்கு நிகராக மிக வேகமாக வளர்ந்து வரும் திருப்பூரில் மால் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, நெல்லை உள்பட பாராம்பரியமான பெரிய நகரங்களை விடவும் திருப்பூர் வேகமாக வளர்ந்து வருகிறது. திருப்பூரை போல் மிக வேகமாக வளர்ந்த நகரம் தமிழ்நாட்டிலேயே இல்லை.. அந்த அளவிற்கு வளர்ந்து வருகிறது. வந்தாரை வாழ வைக்கும் நகரமாக திருப்பூர் உள்ளது. திருப்பூர் வந்து பிழைக்க முடியாமல் போனால் எங்குமே பிழைக்க முடியாது என்பது அந்த ஊரில் உள்ள பழமொழியாகும். ஆம்.. முற்றிலும் உழைப்பார்களின் நகரம் ஆகும்.. நம்பி வந்த பலரை கோடீஸ்வரர்களாக்கிய நகரம் ஆகும்.

ஆனால் இவ்வளவு வேகமாக வளரும் திருப்பூரில் கோவை, சென்னைக்கு நிகரான கட்டமைப்பு வசதிகள் இல்லை..எனினும் மெல்ல மெல்ல அந்த நிலையும் மாறி வருகிறது. புதிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல திருப்பூரை குறிவைத்து களம் இறங்கி வருகின்றன. மால்களை பொறுத்தவரை கோவையில் உள்ளது போல் திருப்பூரிலும் ஷாப்பிங் மால் வருகிறது. திருப்பூரின் முதல் ஷாப்பிங் மால், ஆர்னோதயா மால், விரைவில் திறக்கப்பட உள்ளது.

திருப்பூர் பல்லடம் சாலையில் பல்லடம் நகருக்கு மிக அருகே சுமார் 2.60 லட்சம் சதுரடியில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த ஷாப்பிங் மால் சினிமா பார்க்க விரும்புவோருக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள், மொத்தம் 5 திரையரங்குகளைக் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்க வசதி அமைக்கப்பட்டுள்ளத. இதில், 2 திரையரங்குகள் PLF (Premium Large Format) திரையரங்குகளாக இருக்கிறதாம்.

இதேபோல் ஷாப்பிங் செய்ய வருவோருக்காக பெரிய மால்களில் உள்ளது போன்ற புட் கோர்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்னோதயா மாலில் 300 இருக்கைகள் கொண்ட புட் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான உணவகங்கள் இடம் பெற உள்ளதாம். இந்த ஷாப்பிங் மாலில் 200 மீட்டர் நீளமுள்ள சர்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் ரிங்க், 2 டர்ஃப் கோர்ட்டுகளும் (Turf Court) அமைக்கப்பட்டுள்ளதாம். அதேபோல் இந்த ஆர்னோதயா மாலில் 800 கார்கள் மற்றும் 600 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இந்த மால் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.













Click it and Unblock the Notifications