திருப்பூரில் கோடியில் கல்யாணம்.. ஆனால் எந்த அப்பாவும் பார்க்க கூடாத கோலம்.. ரிதன்யாவின் தந்தை பேட்டி
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த அண்ணாதுரை என்ற தொழில் அதிபர் தனது மகள் ரிதன்யாவுக்கு 300 பவுன் நகை, ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் என சுமார் 2.5 கோடி செலவு செய்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஆனால் 78வது நாளில் ரிதன்யா, காரில் இருந்த கோலம் எந்த பெற்றோரும் ஏற்கவே முடியாதது.. இதுபற்றி கூறிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பாரம்பரியமான குடும்பம் என்று திருமணம் செய்துவைத்தேன். ஆனால் இப்படி செய்துவிட்டார்களே என்று பேட்டி அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழில் அதிபர் அண்ணாதுரை பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மகள் ரிதன்யாவுக்கு 27 வயது ஆகிறது. இவருக்கும், கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்பமான ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

2.5 கோடி செலவில் திருமணம்
திருமணத்தின் போது வரதட்சணையாக ரிதன்யா வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டுள்ளார்கள். ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2.5 கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். . ஆனால் இவ்வளவு செய்தும், அண்ணாதுரை மகள் ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை. திருமணம் நடைபெற்ற 10 நாட்களில் இருந்து வாழ்க்கையில் புயல் வீசியுள்ளது.
200 பவுன் நகை
மாமனார் ஈஸ்வரமூர்த்தி (51), மாமியார் சித்ராதேவி (47) ஆகிய இருவரும் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி டார்ச்சர் செய்தார்களாம். எதற்கெடுத்தாலும் திட்டி வந்தார்களாம். மேலும் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் அமர்ந்திருக்க ரிதன்யாவை ஒரு மணி நேரம் நிற்க வைத்து மனரீதியாக துன்புறுத்தினார்களாம். கவின்குமார் குடும்பத்திற்கு வாடகை மூலம் மாதாந்திர வருமானம் இருந்த நிலையில், இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். அத்துடன் முழுநேரமும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தினார்களாம்.
ஆறுதல் சொன்ன அண்ணாதுரை
ரிதன்யாவின் கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மன ரீதியாகவும் கடுமையான சித்திரவதை செய்தார்களாம்.ஒரு கட்டத்தில் முடியாமல், இனி இந்த வாழ்க்கையை தன்னால் வாழ முடியாது என தன் தந்தையிடம் ரிதன்யா பலமுறை கூறியிருக்கிறாராம். ஆனாலும் அண்ணாதுரையும் அவரது மனைவியும், தனது மகளிடம் பெரிய குடும்பம் என்றும், சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும், கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி வந்துள்ளார்கள்.
ரிதன்யா எடுத்த முடிவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரிதன்யா சேவூர் அருகே தாளக்கரையில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வழக்கம்போல் ரிதன்யா சென்றார். காரை அவரே ஓட்டியிருக்கிறார். அதன்பின்னர் மொண்டிபாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார் ரிதன்யா. அங்கு செட்டிபுதூர் பகுதியில் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு காரில் இருந்தபடி மருந்தை குடித்து, காருக்குள்ளேயே வாயில் நுரை தள்ளியபடி ரிதன்யா மயங்கி கிடந்தார்.
கார் நின்றிருந்தது
நீண்டநேரமாக கார் நிற்பதை பார்த்த அந்தபகுதியினர் சேவூர் காவல் நிலையம் மற்றும் ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது ரிதன்யா இறந்து விட்டது தெரியவந்தது. அவர்கள் தனது மகள் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாட்ஸ் அப் மெசேஜ்
உயிரை விடும் முன்பு, ரிதன்யா தனது தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப்பில் "மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உடன்பாடு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் தன் சாவிற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம்" என்று மெசேஜ் அனுப்பி உள்ளாராம். இந்த நிலையில் ரிதன்யா வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி (51), மாமியார் சித்ராதேவி (47) ஆகியோரை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேவூர் போலீசார் கைது செய்தனர்.
ரிதன்யாவின் தந்தை பேட்டி
ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கண்ணீர் மல்க கூறும் போது, " நல்ல குடும்பம், பாரம்பரியமான குடும்பம் என்றுதான் எனது மகளைத் திருமணம் செய்து வைத்தேன். ஆனால் என் பிள்ளையைத் துன்புறுத்தி உயிரையே எடுத்துவிட்டனர். கல்யாணமான 15 நாட்களிலேயே என் பிள்ளையை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். எனது மகள், கவின்குமார் மற்றும் அவரது அப்பா ஈஸ்வரமூர்த்தி , அம்மா சித்ராதேவி ஆகியோரால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளார். நாங்கள் புதிய குடும்பம், கொஞ்சம் அனுசரித்துப் போகுமாறு என் மகளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன். என் மகளுக்கு நடந்த இந்த துயரம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications